தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதுகுறித்து கலந்தாலோசிப்பதற்காக – காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்புடன் (மெகா) காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சந்தித்துப் பேசியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் - இதற்கான அறிவிப்பினை, டிசம்பர் 13 க்குள் வெளியிடவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இத்தேர்தல்களில் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதனை அறிந்திட, சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி மற்றும் துண்டு பிரசுரம் வாயிலாக - கருத்துக்கள் கேட்கப்பட்டது.
மூன்றில் இரு பங்கினர், தேர்தலில் நிற்கவேண்டும் என்று தெரிவித்தனர்; அதில் - பெருவாரியானவர், ஒத்தகருத்துக்கொண்ட அமைப்புகளுடன் இணைந்து சந்திக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஒத்தகருத்துகள் கொண்ட அமைப்புடன், தேர்தல் குறித்து பேசிட - மெகா அமைப்பு, குழு ஒன்றினை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை - உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து பேசிட, இரு தினங்களுக்கு முன்பு - மெகா அமைப்புக்கு அழைப்பு வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் - நேற்று (19-11-2019) - இரவு, ஐக்கிய பேரவையின் அலுவலகத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில் - ஊழல் - லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிரான தலைவர், உறுப்பினர்கள் - தேர்வு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கான சில ஆலோசனைகளும் மெகா அமைப்பு சார்பாக வழங்கப்பட்டது.
குறிப்பாக -
-- குறிப்பிட்ட சில வார்டுகள் என இல்லாமல் அனைத்து வார்டுகளிலும், நேர்மையான, லஞ்சம் - ஊழலுக்கு எதிரான உறுப்பினர்கள் நிறுத்தப்படவேண்டும்
-- அரசியல் கட்சியினர், நேரடியாகவோ, மறைமுகமாகவோ - உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு பெறக்கூடாது
-- எந்த தனி நபர் / அரசியல் கட்சிகளுக்கும், விலைபோகாத நபர்கள் தேர்வு செய்யப்படவேண்டும்
ஆகிய கருத்துக்கள் - மெகா அமைப்பு - சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|