காயல்பட்டினம் நகராட்சியின் பெயரைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனமொன்று ஸ்டிக்கர் வணிக மோசடியில் ஈடுபட்டுள்ளது குறித்து, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (மெகா) சார்பில் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, ‘மெகா’ சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் பகுதியில் தருமபுரி மாவட்டம் சார்ந்த பொது சேவை மையம் (COMMON SERVICE CENTRE) என்ற அமைப்பு பெயரில், ஒவ்வொரு வீட்டிலும், ஒரு ஸ்டிக்கரை - ரூபாய் 50 பெற்றுக்கொண்டு விற்று வருகிறார்கள்.
இந்த ஸ்டிக்கரில் காயல்பட்டினம் நகராட்சி பெயர் போடப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கரை விற்பதற்கு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொ) - திருமதி புஷ்பலதா அனுமதி கொடுத்து கடிதமும் கொடுத்துள்ளதாக அவர்கள் கடிதம் ஒன்றும் வைத்துள்ளார்கள்.
இந்த ஸ்டிக்கர் வாங்கவில்லை என்றால் - நகராட்சி மூலம் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், அரசு நல திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும் என்றும் சொல்லி - விற்பனை செய்துள்ளார்கள். காட்டு தைக்கா தெருவில் - நடப்பது என்ன? குழுமம் - இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது என்றும் அந்த ஸ்டிக்கரை விற்க சென்றவர்கள் சொல்லியுள்ளார்கள். இது உண்மையல்ல.
இந்த ஸ்டிக்கர் அவசியம் இல்லை, வாங்குவது கட்டாயம் இல்லை என்றே நடப்பது என்ன? குழுமம் - பொது மக்களிடம் தெரிவித்து வந்துள்ளது. இந்த விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள், பெரிய நெசவு தெருவில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து இதனை செய்துவருவதாக தெரிகிறது.
இந்த விற்பனைக்கு என அவர்கள் பொது மக்களிடம் - ஒரு ரசீது கொடுத்து வருகிறார்கள். அந்த ரசீதில் எந்த பில் நம்பரும் கிடையாது; GST எண் கிடையாது; அவர்கள் கொடுத்துள்ள முகவரி (789, Karim Mansion, Anna Salai, Chennai - 2)- போலியானது என விசாரணையில் தெரிகிறது.
அந்த முகவரியில் ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் APNA CSC என்ற எந்த நிறுவனமும் கிடையாது. மக்களை நம்ப வைக்க, இவ்வாறு ஒரு முகவரியினை கொடுத்துள்ளார்கள்.
எனவே - இது சம்பந்தமாக - நகராட்சி ஆணையர் மற்றும் அந்த தனியார் அமைப்பினரிடம் உரிய விசாரணைகள் மேற்கொண்டு - தக்க நடவடிக்கை எடுக்க - மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆறுமுகநேரி காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோரிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|