காயல்பட்டினத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நகர் முழுக்க மழைநீர் தேங்கி, வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கருத்திற்கொண்டு, நகரின் பொதுநல அமைப்புகள் பல வடிவங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், அரசின் சார்பில் நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள காயல்பட்டினம் நகராட்சியோ – ஒரேயொரு பொக்லைன் இயந்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு கண்துடைப்புக்காக சில பணிகளைச் செய்து வருவதாக பொதுமக்கள் கொதிப்புடன் குற்றஞ்சாட்டி வருகின்றனர். நகராட்சியின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில், அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் பணம் இல்லையா?
அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் படிக்கும் பாடத்தில் ஒன்று - தென் மேற்கு பருவமழை எப்போது பொழியும் (ஜூன் - செப்டம்பர்); வடகிழக்கு பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) எப்போது பொழியும் என்பதாகும்.
மேலும் - தென் தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காலகட்டமான - அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் தான் அதிகம் மழை பெய்யும் என்பதும் - வானிலை அறிக்கைகள் வழங்கும் பாடம்.
வடகிழக்கு பருவமழை காலம் துவங்குவதற்கு முன்பு - அரசு துறைகள், செப்டம்பர் மாதம் துவக்கத்திலேயே - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது வழமை.
ஆனால் இவ்வாண்டு - இந்த பாடங்களை அறியாத காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் - அவ்வாறு, முறையான நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.
நகராட்சியின் பொறுப்பு ஆணையராக உள்ள பொறியாளர் திருமதி புஷ்பலதா நகருக்கு புதியவர் என்று விளக்கம் கொடுத்தாலும், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஓவர்சீயர் என்ற பொறுப்பில் - சுதாகர் என்பவர் பணியாற்றிவருகிறார்'; கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதார ஆய்வாளர் என்ற பொறுப்பில் பொன்வேல் ராஜ் என்பவர் பணியாற்றிவருகிறார்; கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில் என்ற நபர், பொறியியல் துறையில் - தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
மழைக்காலங்களில் நகரில் எங்கெங்கு மழைநீர் தேங்கும், என்னென்ன பாதிப்புகள் வரும் என புதிதாக வந்துள்ள பொறியாளருக்கு தெரியாவிட்டாலும், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நகராட்சி அதிகாரிகள்/ஊழியர்களுக்கு தெரியாதா?
ஆனால் - கன மழையினால் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சனைகளை தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் நகராட்சி எடுக்கவில்லை. காயல்பட்டினம் நகராட்சியில் - மழைக்கால துவக்கத்தில் இருந்து ஒரேயொரு JCB மட்டுமே பணியமர்த்தியிருந்தது.
அக்டோபர் மாதம் துவங்கிய மழை - தற்போது தனது இறுதி மாதத்தை எட்டியுள்ளது.
இந்த காலகட்டத்தில் - நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் (மஹ்லறா நகர், பாக்கர் காலனி, சீதக்காதி நகர், காயிதேமில்லத் நகர், தேங்காய் பண்டகசாலை, சுலைமான் நகர், மங்களவாடி உட்பட பல பகுதிகள்) இருந்து வந்த பல்வேறு புகார்களையும் - அவசர, போர்கால கோரிக்கைகளாக எடுக்காமல் - ஒவ்வொன்றாக செய்வோம் என்ற அலட்சிய போக்கிலேயே நகராட்சி அணுகி வருகிறது.
குறைந்தது ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் பட்ஜெட் கொண்டு இயங்கும் நகராட்சி, JCB / மோட்டார் போன்ற உபகாரணங்களுக்கு தனியார் உதவியை நாடும் அவலம் - தற்போது அரங்கேறி வருகிறது.
நகரின் ஒவ்வொரு குடிமகனும் செலுத்தும் வரி, இந்த மழை காலங்களில் அவர்களின் தேவைகளை - கூடுதல் JCB, கூடுதல் மோட்டார் மேலும் இன்னபிற பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றால் - எதற்காக பொது மக்கள் வரி செலுத்துகிறார்கள்?
காயல்பட்டினம் நகராட்சியின் இந்த அவல நிலை - மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) மூலம் கொண்டு செல்லப்பட்ட பிறகு, நேற்று - கூடுதல் மாவட்ட ஆட்சியர் நகருக்கு விஜயம் செய்துள்ளார்; அதன் பிறகு - கூடுதலாக JCB / மோட்டார் போன்ற உபகரணங்களை இயக்கவும் அவர் மூலம் உத்தரவுகளும் வந்துள்ளன.
மக்களின் தேவைகளை முற்கூட்டியே அறிந்து, பிரச்சனைகள் உருவாகுவதற்கு முன்பே அவற்றை தீர்க்க, எதிர்கொள்ள திறன் கொண்ட - நிர்வாகம், தற்போது காயல்பட்டினம் நகராட்சியில் இல்லை என்பதே நிதர்சன உண்மை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|