நகரில் பொதுமக்களுக்குப் பகிரப்பட வேண்டிய குடிநீர் தொடர்ந்து வீண்விரயம் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்குக் காரணமான - அனுபவமற்றவருக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்யுமாறும் காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்புடன் (மெகா) சார்பில், நகராட்சிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் புதிய குடிநீர் திட்டத்தின் பொன்னங்குறிச்சி தலைமை குடிநீர் மையம் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியும், உள்ளூரில் தினசரி குடிநீர் விநியோகம் - வால்வு திறப்பு - பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியும் - இப்பணிகளில் முன் அனுபவம் வேண்டும் என்ற விதிமுறைகள் இணைக்கப்படாமல் - ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, மாதவன் என்ற நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக - பொன்னங்குறிச்சியில் இருந்து வரும் குடிநீர், நகரில் உள்ள உயர்நிலை தொட்டிகளில் ஏற்றப்படும் போது - முறையாக ஏற்றப்படாத காரணத்தால், தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் - பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. மேலும் - தொட்டியை சுற்றியுள்ள பகுதிகளில், குளமாக நீர் தேங்குகிறது.
சமீப காலத்தில் - பேருந்து நிலைய வளாகத்திலும், நகராட்சி வளாகத்திலும் உள்ள உயர்நிலை குடிநீர் தொட்டிகள் இவ்வாறு நிரம்பி வழிந்த காட்சிகள் சமூக ஊடகக்குழுமங்கள் வாயிலாக பகிரப்பட்டு, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் - இந்த நிலை தொடர்ந்து நிலவுகிறது. நேற்றிரவு - நகராட்சி வளாகத்தில் உள்ள உயர்நிலை தொட்டி நிரம்பி வழிந்த காணொளி காட்சி இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் - இந்த முக்கிய ஒப்பந்தப்புள்ளிகள், முன் அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டது தான்.
பலமுறை இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டும், இவ்வாறு தொடர்ந்து குடிநீர் வீண் விரயம் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு - அனுபவமில்லாத ஒப்பந்ததாரர் மாதவன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்த செய்து, முறையான முன் அனுபவ நிபந்தனைகளை இணைத்து - மறு ஒப்பந்தப்புள்ளி கோரிட வேண்டி, ஆணையர் பொறுப்பு வகிக்கும் நகராட்சி பொறியாளருக்கு மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - கோரிக்கை மனு இன்று வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|