2018 – 2019 பருவத்தில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் – தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து – காயல்பட்டினத்திற்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு, அத்தொகை என்னென்ன பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்பன குறித்த தகவலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) பெற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, ‘மெகா’ சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் - அவரின் தொகுதி மேம்பாட்டுக்காக, மாநில அரசு - ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது.
அந்த நிதி மூலம் MEMBER OF LEGISLATIVE ASSEMBLY CONSTITUENCY DEVELOPMENT SCHEME; MLACDS அவரின் தொகுதியில் உள்ள எந்த பகுதிக்கும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள - சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்யலாம்.
ஆண்டொன்றுக்கு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும் தொகை - 2011 - 2012 நிதியாண்டு முதல், 2 கோடி ரூபாயாகும். இந்த தொகை - ஜனவரி 2018 இல் 2.5 கோடி ரூபாய் என்றும், இவ்வாண்டு ஜூலை மாதம் - 3 கோடி ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 15 சதவீத வாக்காளர்களை கொண்ட காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு, சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - 2011 - 2012 முதல், எவ்வளவு நிதி ஒதுக்கினார்?
இது குறித்த விபரங்களை (2017 - 2018 வரை), நடப்பது என்ன? குழுமம் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RIGHT TO INFORMATION ACT; RTI) கீழ் பெற்று - 2018 ஜூலை மாதம் வெளியிட்டது.
அதன் விபரங்கள் இதோ:
2011-2012 முதல் 2017-2018 வரை, காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கிய மொத்த தொகை - ரூபாய் 64,40,750*
ஆண்டு வாரியாக சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கிய தொகை
2011-2012: ரூபாய் 0
2012-2013: ரூபாய் 21,00,000
2013-2014: ரூபாய் 0
2014-2015: ரூபாய் 14,90,750
2015-2016: ரூபாய் 10,00,000
2016-2017: ரூபாய் 1,00,000
2017-2018: ரூபாய் 17,50,000
தற்போது 2018 - 2019 நிதியாண்டில் என்ன தொகை செலவு செய்யப்பட்டது, நடப்பாண்டில் (2019 - 2020) இதுவரை என்ன செலவு செய்யப்பட்டது என்ற விபரம் - நவம்பர் 15 தேதிய கடிதம் மூலமாக பெறப்பட்டுள்ளது.
2018 - 2019 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சியில், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் நிதியில் இருந்து, கீழ்க்காணும் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
பெரியநெசவு தெரு - ஐஓபி சந்திப்பு பயணியர் நிழற்குடை - ரூபாய் 500,000
கடையக்குடி (கொம்புத்துறை) நடுப்பள்ளிக்கு பெஞ்ச்/டெஸ்க் - ரூபாய் 450,000
காயல்பட்டினம் அரசு மகளிர் பள்ளிக்கு 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட RO PLANT - ரூபாய் 500,000
காயல்பட்டினம் அரசு மகளிர் பள்ளிக்கு ஆய்வுக்கூட உபகரணங்கள் மற்றும் LCD PROJECTOR - ரூபாய் 250,000
பப்பரப்பள்ளி மயானநிலத்தை சுற்றி சுவர் - ரூபாய் 500,000
2018-2019: ரூபாய் 22,00,000 (காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு செலவு செய்த தொகை)
இந்த காலகட்டத்தில் (ஓர் ஆண்டிற்கு) - தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கிய தொகை - ரூபாய்.2.5 கோடி ரூபாய். அதாவது - தனது தொகுதியில், சுமார் 15 சதவீதம் மக்களை கொண்ட காயல்பட்டினம் நகராட்சிக்கு - சட்டமன்ற உறுப்பினர் - 2018-19 - காலகட்டத்தில், மொத்த நிதியில் செலவு செய்த சதவீதம் - 8.8.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவுக்கு தேவையான பணிக்கு ஜூலை மாதம் துவக்கத்தில் 10 லட்சம் ரூபாய் - சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கியதாகவும், அதன்பிறகு கூடுதலாக நவம்பர் துவக்கத்தில் - 10 லட்சம் ரூபாய் (அதாவது மொத்தமாக 20 லட்சம் ரூபாய்) ஒதுக்கியதாகவும் தகவல் வெளியாகியது.
ஆனால் - 2019 - 2020 நிதியாண்டில், நவம்பர் 15 (2019) தேதி வரை - காயல்பட்டினம் நகராட்சி பகுதியில், எந்த பணிக்கும், சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கியதாக - RTI மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள்படி - தகவல் இல்லை.
இவ்வாண்டு ஜூலை மாதம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியினை, ஆண்டொன்றுக்கு தமிழக அரசு 3 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|