நிரந்தர ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் இன்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும், நிரந்தரத் தீர்வு கோரியும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (மெகா) சார்பில் – தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலரிடம் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, ‘மெகா’ சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் நிரந்தர ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (LAB TECHNICIAN) - கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளது. தற்காலிக அடிப்படையில் வாரத்திற்கு 2 / 3 நாட்களுக்கு, வெளி மருத்துவமனையில் இருந்து வருகிறார்.
பிற தினங்களில் மருத்துவமனைக்கு செல்பவர்களும், மற்ற தினங்களில் பரிசோதனைக்கு கொடுத்து முடிவு அறிந்திட வருபவர்களும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு - மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் (DMS) மருத்துவர் டிஎஸ்.ஸ்வாதி ரெத்தினாவதி அவர்களை சென்னையில் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகிகள் நேரில் சந்தித்து - காலியிடத்தை விரைவில் நிரப்பிட கோரிக்கை மனு வழங்கினர்.
மேலும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர்கள் - வேறு மருத்துவமனைகளுக்கு அடிக்கடி அனுப்பப்படும் பழக்கம் நிறுத்தப்படவேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அதற்கு பதில் வழங்கிய இயக்குனர் - இது குறித்து இணை இயக்குனர் (தூத்துக்குடி) அவர்களுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|