தாமிரபரணி ஆற்றுப்பகுதி உட்பட பல்வேறு நீராதாரப் பகுதிகள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அறியப்படுவதாகவும், முறையாக ஆய்வு செய்து மீட்டிடுமாறும், சென்னையிலுள்ள தமிழக அரசின் உயரதிகாரிகளிடம் - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு முறையிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரம் – 12.5 sq.km. பரப்பளவு கொண்டதாகும்.
மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரமான இங்கு - பல நீரோடைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, சில நீரோடைகள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டு - பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உதாரணமாக - காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 277 நிலம் - 1910 க்கு முந்தைய ஆவணங்கள்படி - தாமிரபரணி ஆறு என காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் - பிறகு உருவாக்கப்பட்ட ஆவணங்கள், அவற்றை பட்டா இடங்களாக காண்பிக்கின்றன. இது எவ்வாறு சாத்தியம் என விசாரிக்கவேண்டும்.
மேலும் - இது போல, நகரின் பல நீராதாரங்கள், பட்டா இடங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எனவே - அவை குறித்து முறையான விசாரணை நடத்தி, அந்நிலங்களை மீட்க உத்தரவிடும்படி கோரி - இன்று, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - கூடுதல் தலைமை செயலர் திரு அதுல்ய மிஸ்ரா IAS மற்றும் நில நிர்வாகத்துறை ஆணையர் திரு ஜெயக்கொடி IAS ஆகியோரிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|