பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகச் சுற்றித் திரியும் கால்நடைகள் குலசேகரன்பட்டினம் கோசாலைக்குக் கொண்டு செல்லப்படும் என காயல்பட்டினம் நகராட்சி அறிவித்துள்ளதாக காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்புடன் (மெகா) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் வீதிகளில் - ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
முக்கிய தெருக்களில் கூட அதிகமாக கால்நடைகள் காணமுடிகிறது. இதனால் - பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவது மட்டுமன்றி, சுகாதாரத்திற்கும் கேடாக அமைகிறது. இதன் காரணமாக வாகன விபத்தும் நிகழும் சூழல் உருவாகிறது.
இது சம்பந்தமாக - நவம்பர் 11 அன்று நகராட்சியிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக புகார் மனு வழங்கப்பட்டது.
தொடர்ந்து - பேருந்து நிலைய வளாகத்திலும், அதிகமாக கால்நடைகள் காணப்படுவது குறித்தும் - நகராட்சிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நவம்பர் 25 அன்று மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் விளைவாக - தற்போது, காயல்பட்டினம் நகராட்சி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
ஆடு, மாடு வளர்ப்போர் - வீடுகளில் அவற்றினை கயிற்றில் கட்டி வளர்க்கவேண்டும் என்றும், அவ்வாறு கட்டப்படாமல் சுற்றித்திரியும் ஆடு - மாடுகள், நகராட்சியினால் எந்நேரமும் கைப்பற்றப்பட்டு - குலசேகரப்பட்டினத்தில் உள்ள அரசு கோசாலையில் விடப்படும் என்றும், அதன் பிறகு - நீதிமன்றம் மூலமே அவற்றை மீண்டும் பெற முடியும் என்றும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் - நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆட்டுக்கும் தினம் ஒன்றுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், மாட்டுக்கு தினம் ஒன்றுக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|