தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி அல்லாத இதர கிராம உள்ளாட்சி மன்றங்களுக்கு இம்மாதம் 27, 30 ஆகிய இரு நாட்களில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என இன்று காலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 2020 ஜனவரி மாதத்தில் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு வரை காயல்பட்டினம் நகராட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக நகரில் பெய்து வரும் கனமழை – தேர்தல் களப் பணிகளிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளது.
வழமைக்கு மாற்றமாக, இம்முறை அரசியல் கட்சிகளும் காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடும் முடிவில் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தம் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்துத் தேர்தலில் போட்டியிடப் போவதாக முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்துள்ளதோடு, தமக்கான வார்டுகளையும் ஒதுக்கித் தரக் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசியலிலும், ஆன்மிகத்திலும் தலையிடப் போவதில்லை என்பதை நிலைபாடாகக் கொண்டுள்ளபோதிலும், தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடப் போவதாக, 17.11.2019. அன்று 11.00 மணியளவில், அதன் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19.11.2019. அன்று நகரின் அரசியல் கட்சிகள், சமுதாய & பொதுநல அமைப்புகளது பிரதிநிதிகளை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அழைத்துப் பேசியுள்ளது. தொடர்ந்து பேசியும் வருகிறது.
காயல்பட்டினத்தில், அனைத்து சமுதாயத்தினரையும் அங்கப்படுத்தி நகர்நலப் பணிகளைச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலதிபர் எஸ்.அக்பர்ஷா தலைமையில், “காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு – Kayalpatnam All Community Forum – KACF” என்ற பெயரில் புதிய அமைப்பு துவக்கப்பட்டது. அதுவும் அரசியலில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தபோதிலும், நகர மக்களின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளப் போவதாக 17.11.2019. அன்று காலையில் சென்னையில் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அதனடிப்படையில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், அதன் சமூக ஊடகக் குழுமமான “நடப்பது என்ன?” குழும ஒருங்கிணைப்பில் தேர்தலில் நேர்மையான – தகுதியானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்து, களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படியாகக் களப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை அனைவரின் கவனத்தையும் நிவாரணப் பணிகளை நோக்கித் திசை திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|