காயல்பட்டினத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நகர் முழுக்க மழைநீர் தேங்கி, வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கருத்திற்கொண்டு, நகரின் பொதுநல அமைப்புகள் பல வடிவங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் மழை வெள்ள நிவாரணக் குழு கிழக்குப் பகுதி சார்பில், நகராட்சியிடம் தொடர்ந்து முறையிடப்பட்டதையடுத்து, அப்பகுதியில் பல நாட்களாகத் தேங்கி – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்த மழை நீரை, காயல்பட்டினம் நகராட்சிப் பணியாளர்கள் பொக்லைன் இயந்திர உதவியுடன் வடிகால் அமைத்து கடலுக்கு வழிந்தோடச் செய்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
கிழக்குப்பகுதி நிவாரணக்குழுவின் சார்பாக கொச்சியார் தெருவின் பின்புறம் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். சுமார் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ள இடத்துக்கு உள்ளேயே சுமார் 400 மீட்டர் வாய்க்கால் பாதை அமைத்து அதை C.கஸ்டம்ஸ் சாலையில் உள்ள வடிகால் குழாயில் வந்து இணைக்கும்பணி நடந்தேறியுள்ளது.
மழைநீர் வழிந்தோடும் குழாயின் மறுபுறமும் தேங்கிய நீர் வழிந்தோட வாய்க்கால் குழியை நீண்ட தூரம் வரை ஆளப்படுத்தியுள்ளோம். தற்போது தேங்கிய நீர் ஓரளவு வழிந்தோடி வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.....
அதைப்போல் ரெட் ஸ்டார் பின்புறம் உள்ள குடிநீர்த்தேக்கத்தொட்டியின் பக்கத்தில் இருந்து வாய்க்கால் பாதை ஒன்று அமைக்கப்பட்டு மாட்டுக்குளம் தண்ணீர் வழிந்தோடி இணையும் குழாயில் கொண்டு சேர்க்கும் பணி நடந்து முடிந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் கொச்சியார் தெருவில் நஹ்வி அப்பா தைக்கா செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி இன்று ஓரளவு வழிந்தோடிய நிலையில் நடந்து செல்ல பாதை இல்லாமல் சாக்கடை கலந்த தண்ணீரில் நடந்து செல்வதை தவிர்க்கும் பொருட்டு நடந்து செல்ல மண்பாதை ஒன்றும் போடப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ். மீதமுள்ள பணிகள் நிறைவுபெற தொடர்ந்து பேரவையின் கிழக்குப்பகுதி குழு பணியாற்றும்.
அல்லாஹ் நம் நிய்யத்தை நிறைவேற்றி மக்கள் நோய் நொடியில்லாமல் வாழ வழிவகுப்பானாக ஆமீன்.....
பேரவையின் கிழக்குப்பகுதி அங்கத்தினர்கள்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
|