காயல்பட்டினத்தில் அண்மைக்காலமாகப் பெய்து வந்த தொடர்மழையால் நகரின் அனைத்துப் பகுதிகளும் மழைநீர்த் தேக்கத்துடனும், தாழ்வான பல பகுதிகள் மூழ்கியும் உள்ளன. மூழ்கிய அனைத்துப் பகுதிகளையும் ஆவணப்படுத்தி, மழைநீர் வடிகால் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட தமிழக அரசிடம் காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரமான காயல்பட்டினம் (12.5 சதுர அடி; மக்கள் தொகை - சுமார் 50000) - பருவமழை காலங்களில் நீரில் மூழ்குவது காலகாலமாக - நாம் காணும் காட்சியாகும்.
2011 - 2016 காலகட்டத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. ஆனால் - அப்பணிகள் அதன்பிறகு தொடரப்படவில்லை.
சுலைமான் நகர் போன்ற பகுதிகளுக்கு வடிகால் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, அவைகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை.
மழைக்காலங்களில் மக்கள் அவதியுறுவதும், அதனை காண - அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் வருவதும், வாக்குறுதிகள் கொடுப்பதும் - தொடர் நிகழ்வுகளாக, பல ஆண்டுகளாக உள்ளன. இவ்வாண்டும் - மழைநீரில் மூழ்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகளும் இதே வாக்குறுதியை கொடுத்து சென்றுள்ளனர்.
ஜனவரி பிறந்தால் - மழை நின்றுவிடும். தேங்கிய நீர் வற்றிவிடும். அதன் பிறகு - மக்களும் சிரமங்களை மறந்திடுவர். அதிகாரிகளும் வாக்குறுதிகளை மறந்திடுவர்.
இதனை கருத்தில் கொண்டு - தற்போது நகரில் நீரில் மூழ்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, ஆவணப்படுத்தி - உடனடியாக, நகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தினை வடிவமைக்க உத்தரவிட கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியர், திருச்செந்தூர் வட்டாச்சியர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|