காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை சார்பில், ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 01 முதல் 14 வரை, மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவாக கந்தூரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
காலை நிகழ்ச்சிகள்:
அதனடிப்படையில், நடப்பாண்டு கந்தூரி நிகழ்ச்சிகள் 29.11.2019. வெள்ளிக்கிழமை துவங்கி, 11.12.2019. புதன்கிழமை வரை நடைபெற்றது. இந்நாட்களில் அன்றாடம் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், மவ்லித் மஜ்லிஸும் நடத்தப்பட்டது.
இரவு தொடர் சொற்பொழிவு:
02.12.2019. திங்கட்கிழமை முதல் 10.01.2017 செவ்வாய்க்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பின் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் கீழ்க்காணும் நிகழ்முறைப்படி நடைபெற்றன.
கந்தூரி நாள் நிகழ்ச்சிகள்:
கந்தூரி நாளான 11.12.2019. புதன்கிழமையன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. கந்தூரி நிகழ்ச்சிக்கு வருகை தரும் மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, மஹ்ழரா அமைந்துள்ள அம்பல மரைக்கார் தெரு சாலை முழுக்க பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மஃரிப் தொழுகைக்குப் பின், மவ்லவீ கலீஃபத்துல் காதிரீ எல்.ஓ.எம்.முஹம்மத் அலீ மஹ்ழரீ தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றன.
துஆ பிரார்த்தனை:
அன்று 20.30 மணி முதல் 21.30 மணி வரை துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. பாவ மன்னிப்பு, நோய் நிவாரணம், மணமாகாதோருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், முகஸ்துதியை விட்டும் பாதுகாப்பு, கொள்கை குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு, மக்கள் நலன், அநீதிக்கு அழிவு, சமூகப் பாதுகாப்பு, வரதட்சணைக் கொடுமை ஒழிப்பு, ஹஜ் - உம்றா பாக்கியம், மேற்கொள்ளும் பயணங்களில் பாதுகாப்பு. வளமான வாழ்வு, நீண்ட ஆயுள், கலிமாவுடன் நல்ல மரணம் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆ இறைஞ்சினார்.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு மஹ்ழராவையொட்டிய தென்பகுதியில் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
நேர்ச்சைப் பகிர்வு:
12.12.2019 செவ்வாய்க்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், ஃபாத்திஹா துஆவுடன் நேர்ச்சைப் பகிர்வு துவங்கி, காலை 08.30 மணிக்கு நிறைவுற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கந்தூரி விழா நிகழ்ச்சிகளனைத்தும், காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியின் இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஹ்ழரா நிர்வாகிகளும், கந்தூரி கமிட்டி நிர்வாகிகளுமான எம்.பி.ஏ.மரைக்கார் ஸாஹிப் (தலைவர்), எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா (செயலாளர்), எம்.கே.முஹ்யித்தீன் தம்பி – துரை (பொருளாளர்) ஆகியோரின் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான் & முஹ்யித்தீன் டீவி
|