சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் – மழலையருக்கான போட்டிகள், அனைவருக்குமான பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 59-வது குளிர்கால பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி கடந்த 15-11-2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை ரியாத் சுலை பகுதியில் அமைந்துள்ள “லூ லூ இஸ்திராஹாவில்” வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
வரவேற்பு:
காலை 11.00 மணியில் இருந்தே உறுப்பினர்கள் பத்ஹா - லக்கி மற்றும் R.T. ரெஸ்டாரண்ட் அருகில் வருகை தர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்விடத்திற்கு அழைத்து வந்தனர், சொந்த வாகன வசதி உள்ளவர்கள் தமது நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் வந்து சேர்ந்தனர். வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தி கொண்டனர். புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பி தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்கள்.
விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தாங்கள் நடத்தவிருக்கும் போட்டிகளுக்கான ஆயத்த வேளைகளில் வெளியரங்க விளையாட்டு மைதானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். ஜும்ஆவுடையே நேரம் நெருங்கியதும் அனைவரும் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று குத்பா உரையில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.
பொதுக்குழு கூட்டம்:
மன்ற 59-வது பொதுக்குழுக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்குத் துவங்கியது. நிகழ்ச்சிகளைச் செயற்குழு உறுப்பினர் சகோதரர் PSJ ஜைனுல் ஆப்தீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள், தொடர்ந்து பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். ஹாஃபிழ் ஜமீல் அவர்கள் இறைமறை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்கள்:
மன்ற செயலாளர் சகோ. இஸ்மாயில் அவர்களின் தந்தை ஜனாப். NSE மஹ்மூத், மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ. ஜைத் மிஸ்கீன் அவர்களின் மாமனார் ஜனாப். கரூர் ஹசன் மற்றும் மன்ற துணைப் பொருளாளர் சகோ. SB முஹைதீன் அவர்களின் மாமனார் ஜனாப். ஷாகுல் ஹமீத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
RKWA செயல்பாடுகள்:
எமது மன்றத்தின் துணைத் தலைவர் சகோ. கூஸ் அபூபக்கர் அவர்கள் மன்றத்தின் செயல்பாடுகளைப் பற்றி விளக்கம் அளித்தார். RKWA-வின் முக்கிய செயல்திட்டங்களான மருத்துவம், கல்வி மற்றும் சிறுதொழில் சார்ந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றை ஷிஃபா மற்றும் இக்ரா கல்வி சங்கம் மூலம் பயனாளர்களுக்கு நிதி வழங்கிடும் முறை பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அதுமட்டும் அல்லாது, புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், பெருநாளன்று இரவு நாட்டுக் கோழி வழங்கிடும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், இமாம் மற்றும் முஅத்தீன்களுக்கு பெருநாளில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், உள்ளூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects, பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் Women And Kids Fund (WAKF) ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளித்தார்.
கருத்துரை:
மன்றத்தின் மூத்த உறுப்பினரும் மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினருமான சகோதரர் நுஸ்கி நமதூர் மக்களை ஒரே இடத்தில் ஒன்றிணைவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இதுபோன்ற வாய்ப்பினை வரும் காலங்களில் தவற விடாது கலந்து கொள்ளாத மற்ற சகோதரர்களையும் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுத்தார். நாம் இம்மன்றம் மூலம் செய்யும் உதவிகள் எவ்வாறு நமக்கு இம்மையிலும் மறுமையிலும் பயனுடையதாக இருக்கும் என்பதனை விளக்கினார். மன்ற செயல்பாடுகள் முற்றிலும் நிதி சார்ந்தே செயல்படுவதால், மன்ற உறுப்பினர்கள் தவறாது தங்களது சந்தாக்களைச் செலுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
மன்றத்தின் மூத்த உறுப்பினரும் மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினருமான சகோதரர் ஹைதர் அலி அவர்கள் தமது கருத்துரையில் RKWA அமைப்பின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்கள், தொடர்ந்து நமது தாய் நாட்டில் நிலவும் சூழ்நிலையை எதிர்கொள்ள நாம் நம்மை எவ்வாறு தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்தார். முக்கியமாக, நமது பள்ளிவாசல்களைத் தொழுகைக்காக மட்டும் அன்றி அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், ஒரு சமுதாயக் கூடமாகவும், கல்விக்கூடமாகவும் அதனைப் பயன்படுத்தி நம் சமுதாய மக்கள் பயன் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நன்றியுரை:
குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த இனிய பொதுக்குழு கூட்டத்தை சீரிய முறையில் நடத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த செயற்குழு/பொதுக்குழு உறுப்பினர்கள், பெண்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த சகோதரிகள், உணவு, குடிநீர், தேநீர் மற்றும் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவற்றுக்கு தாராளமாக அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் செயற்குழு உறுப்பினர் சகோதரர் PSJ ஜைனுல் ஆப்தீன் அவர்கள் நன்றி கலந்த பாராட்டுக்களைக் கூற, துஆ, கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
கேக்:
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோ. இப்ராஹீம் பைசல் அவர்களுடன் பணிபுரியும் சவூதி சகோதரர் சகோ. பதர் அல்-ராஷித் அவர்கள் நமது மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டிப் பரிசளித்த மன்ற இலச்சினை பதித்த அழகிய கேக் தனை நமது மன்ற செயலாளர் சகோ. இஸ்மாயில் அவர்களின் தந்தை ஜனாப் NSE மஹ்மூத் அவர்கள் கையால் வெட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எம்மன்ற செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் முகமாக கேக் வழங்கிய சகோதரருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் சிறார்கள் நிதி (Women And Kids Fund – WAKF):
பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த Women And Kids Fund – WAKF திட்டம். இத்தட்டத்தின் மூலம் மன்றத்தின் 57வது பொதுக்குழுவில் உண்டியலை பெற்றுச்சென்ற உறுப்பினர்கள் அதனை மன்றத்தில் ஒப்படைத்தனர். இதன் மூலம் பெறப்பட்ட நிதியைப் பிரத்தியேக செயல்திட்டங்களில் பயன்படுத்திட செயற்குழுவில் தீர்மானிக்கப்படும். மேலும் புதிய உண்டியலினை உறுப்பினர்கள் பெற்றுச்சென்றனர்.
காயல் களரி சாப்பாடு:
மதிய உணவாகக் காயல் பாரம்பரியமிக்க சுவைமிகு களரி கறி, கத்தரிக்கா மாங்காய் மற்றும் நெய்ச் சோறுடன் பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க களரி சாப்பாடு எம்மன்ற செயற்குழு உறுப்பினர்கள் சகோ நுஸ்கி அவர்கள் தலைமையில் சிறப்புறத் தயார் செய்திருந்தனர். எம்மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் சகோ. தீபி அவர்களின் அனுசரணையில் சுவை மிக்க ஐஸ்கிரீம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
விளையாட்டு போட்டிகள்:
அஸர் தொழுகைக் கூட்டாக நிறைவேற்றிய பின் வெளியரங்க விளையாட்டு போட்டிகள் மைதானத்தில் உறுப்பினர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. சிறுவர் / சிறுமியர் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர், செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் சகோ. இப்ராஹீம் பைசல், சகோ இர்ஷாத், சகோ. ஃபைசல் அஹமது மற்றும் சகோ. நெய்னா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இஸ்திராஹாவில் அமைத்துள்ள வெளி விளையாட்டரங்கில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளுடன் எமது இரண்டாம் அமர்வு துவங்கியது. Running Race, Fill the Water Bottle, Balloon Fight, Obstacle Race, Blow the Cup போட்டிகளில் சிறுவர்கள் மிகுந்த சந்தோசத்துடனும் சுறுசுறுப்புடனும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்தது பெரியவர்களுக்கு Pizza Corner, Obstacle Race போன்ற போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது. மஃக்ரிப் நேரம் நெருங்கியதும் கூட்டாக தொழுகை நிறைவேற்றியபின் Tie-Breaker போட்டி மின்னொளியில் தொடர்ந்து நடைபெற்றது. உறுப்பினர்கள் அனைவருக்கும் ரோல்ஸ் மற்றும் சமூசாவுடன், தேநீர் வழங்கப்பட்டது.
பெண்கள் / சிறுமியருக்கான போட்டி:
பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைந்துள்ள தனி அரங்கில் பெண்கள் மற்றும் சிறுமியர்க்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. இந்தப் போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர்.
விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இனிதாக நிறைவுற்ற பின் கூட்டாக இஷா தொழுகை நிறைவேற்றப்பட்டது.
உள்ளரங்கு விளையாட்டு:
வெளியரங்க போட்டிகள் நிறைவுற்றபின் உள்ளரங்க நிகழ்ச்சிகள் துவங்கியது, சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் எண்கள் வைத்து விளையாடும் “BINGO” விளையாட்டை நடத்தினார்கள்.
பரிசளிப்பு விழா:
போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான பரிசளிப்பு விழா தனியாக நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னிலை வகித்த சிறப்பு விருந்தினர்கள், மன்ற நிர்வாகிகள் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.
இரவு உணவு:
இரவு உணவாகக் கோழி சால்னாவுடன் பரோட்டா, இடியாப்பம் மற்றும் சவ்வரிசி பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க கோழி கறி மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ நுஸ்கி தலைமையில் சிறப்புறத் தயார் செய்திருந்தனர்.
வினாடி வினா போட்டி:
செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் ஏற்பாட்டில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இத்துடன் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவுற்றதை அடுத்து உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது இருப்பிடங்களுக்கு விடைபெற்றுச் சென்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
மேலதிக புகைப்படங்களை காண கீழே சொடுக்கவும்
1. https://drive.google.com/open?id=1J9gFHdXcztKKCIH_wvvAytVShg1OAdn2
2. https://drive.google.com/open?id=1VhaXUfS4nchiujK8W7jrPh_IGcdDmdrq
3. https://drive.google.com/open?id=1V_TnggNnMQt4OHXamuzuARb9pVXXw5Ds
4. https://drive.google.com/open?id=180T1JfPwUSSCeLsit5kCJTxMmF3Tp-j9
5. https://drive.google.com/open?id=13RjLVsV7FJ4R-hm-uChkxLs8b7Jmacnd
6. https://drive.google.com/open?id=1L0BLE5ZzpRKp9etTuXqAirhLyb-Pnfwr
7. https://drive.google.com/open?id=1RXURURNI5l6acAQosunNCa-eIol1_Wng
8. https://drive.google.com/open?id=13CMuyWODO0jANNdNAUnrGbZkJfdY0ZNq
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA. |