அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, 18.12.2019. புதன்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். விரிவான விபரம்:-
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து நாடெங்கும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நகரின் அனைத்து பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்களைத் திரட்டி காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பி் 18.12.2019. புதன்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். அதன் நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அனைத்து சமுதாயங்களின் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஐக்கியப் பேரவை துணைத் தலைவர் சாவன்னா பாதுல் அஸ்ஹப் கிராஅத் ஓதி ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தார். துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதோடு, வரவேற்புரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் முத்து முஹம்மத், அதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் ஹஸன், சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா நகரச் செயலாளர் அப்துர்ரஹ்மான், இந்திய தேசய காங்கிரஸ் கட்சி சார்பில் முஸ்தஃபா கமால், மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் சபீர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நெய்னா முஹம்மத், விடுதலை சிறுத்தைகள் சார்பில் யாஸர் அரஃபாத், ஆதித் தமிழர் பேரவை சார்பில் சுந்தர், பாலப்பா முஹ்யித்தீன் அப்துல் காதிர், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்டோர் கண்டன முழக்கங்களை முன்மொழிய, பங்கேற்றோர் அதை வழிமொழிந்தனர்.
“குடியுரிமைத் திருத்தச் சட்டம் – ஒரு விளக்கம்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப், “குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் விளைவுகள்” எனும் தலைப்பில் சட்ட மாணவர் ம.அபூபக்கர், “குடியுரிமைச் சட்டத் திருத்தம் – அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள்” எனும் தலைப்பில் – திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், “குடியுரிமைத் திருத்தச் சட்டம் – நடந்ததும், நடக்கவிருப்பதும் என்ன?” எனும் தலைப்பில் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் கண்டன உரைகளாற்றினர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் தீர்மானங்களை முன்மொழிய, அனைவரும் அதை வழிமொழிந்தனர். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் நன்றி கூறினார்.
இவ்வார்ப்பாட்டத்தில் - நகரின் அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், “மெகா / நடப்பது என்ன?” உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நகரின் ஓரிரு கடைகள் தவிர பெரும்பாலும் அனைத்துக் கடைகளும் – நிகழ் நாளன்று காலை முதல் 18.00 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து – 17.12.2019. செவ்வாய்க்கிழமையன்று கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை ஒன்றுதிரட்டி, ஐக்கியப் பேரவை நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|