அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், சர்வ கட்சிகள் – சர்வ சமய இயக்கங்கள் பங்கேற்பிலான கண்டனப் பொதுக்கூட்டம் - 19.12.2019. வியாழக்கிழமையன்று காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பீ.மீராசா மரைக்காயர், அதன் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்டப் பொருளாளர் கே.மீராசா, காயல்பட்டினம் நகரச் செயலாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் முத்து முஹம்மத், அதன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஐ.அப்துல் காதிர், காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் ஸலீம், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் என்.எம்.காதிர் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்றார்.
கற்புடையார்பள்ளி வட்டம் செல்வமாதா ஆலயத்தின் பங்குத்தந்தை சில்வர் ஸ்டார் மஸ்கரினாஸ், மதிமுக மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், தமுமுக & மமக நகர தலைவர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.ஷாஜஹான், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பாளர் தமிழினியன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையுரையாற்றினார்.
திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும் – திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ.பீ.சி.வி.சண்முகம், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத் தீர்மானங்களை காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம் வாசிக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நன்றி கூற, என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. நிறைவில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், நகரின் அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகளது அங்கத்தினர் உள்ளிட்ட பிரமுகர்களும், நகரப் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை – பெத்தப்பா சுல்தான், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், எம்.இசட்.சித்தீக், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|