பொதுமக்களுக்கு வாழ்வியல் வழிமுறைகளை வலியுறுத்தும் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திட கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 115ஆவது செயற்குழுக் கூட்டம் – 08.12.2019. ஞாயிற்றுக்கிழமையன்று, கத்தர் மன்ஸூராவிலுள்ள காயலர் இல்லத்தில் – மன்றத் தலைவர் மொகுதூம் மீரான் தலைமையில் நடைபெற்றது. மன்ற ஆலோசகர்களான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், எம்.என்.முஹம்மத் யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எம்.ஏ.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மன்றப் பணிகள் குறித்த அறிக்கையை செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் சமர்ப்பித்தார். மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு – செலவு கணக்கறிக்கையை பொருளாளர் ஹுஸைன் ஹல்லாஜ் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒப்புதலளித்தது.
மன்றத்தின் நகர்நலத் திட்டங்கள் குறித்து உள்ளூர் மக்களின் மனப்பதிவுகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்தும், இனி வருங்காலங்களில் செய்யப்பட வேண்டிய நகர்நலப் பணிகள் குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட்டது. கடந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்திருந்த மன்றப் பிரதிநிதி ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், சமூக சேவகர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் மன்றப் பணிகள் தொடர்பான நிறை – குறைகள் குறித்து விரிவான விளக்கமளித்துப் பேச, அதனடிப்படையில் வருங்கால செயல்திட்டங்களை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) நகரப் பொதுமக்கள் பெரும்பாலும் நோய்த் தொந்தரவுகளுக்கு ஆட்படுவது சரியான வாழ்வியலை முறைப்படிக் கடைப்பிடிக்காததால்தான் என்பதால், வாழ்வியலை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை முன்பை விட வலிமையாகவும், பரவலாகவும் நடத்திட தீர்மானிக்கப்படுகிறது.
(2) நகர மாணவ – மாணவியரின் கல்வித் திறன், பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, QUIZ CLUB ஒன்றைத் தரமான முறையில் அமைத்து, பள்ளிகளைச் சாராமல் – பொது அறிவுத் திறன் பெற நாட்டமுள்ள மாணவர்களை வரவழைத்து, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களைச் செய்திடவும், துவக்கமாக மாணவர்களுக்கும் - பின்னர் மாணவியருக்கும் இத்திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தவும் தீர்மானிக்கப்படுகிறது.
(3) பழுதடைந்த ஒரு பள்ளிக்கூட வளாகத்தைச் சரி செய்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படுகிறது.
(4) தீவுத்தெருவிலுள்ள அரசு துவக்கப்பள்ளியில் செய்யப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்து, உள்ளூர் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆய்வு செய்து, மன்றத்திற்கு செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்க மன்றப் பிரதிநிதியிடம் பொறுப்பளிக்கப்படுகிறது.
(5) மன்றத்துடன் இணைந்து நகரில் பரவலாக மரங்களை நட்டு, நல்ல முறையில் அவற்றின் வளர்ச்சியைக் கண்காணித்து ஆவன செய்து வருகிற RISE TRUST அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
(6) மன்றத்தின் அழைப்பையேற்று – தமது பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் கத்தர் வருகை தந்து, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்திலும், நிகழ் செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்றமைக்காக மன்றப் பிரதிநிதி ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், சமூகச் சேவகர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
(7) மன்றப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு கணக்கறிக்கையை இக்கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரையைக்குப் பின், ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி – கத்தர் கா.ந.மன்றம்)
|