காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (மெகா) மீது, அதிமுக ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் சமூக ஊடகங்கள் வழியே பரப்பிய அவதூறுக்கு மெகா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
சி-கஸ்டம்ஸ் சாலை - ஆசாத் தெரு சந்திப்பில் - காஸ் சிலிண்டர் நிரப்பும் தொழிலை செய்துவருபவர் L.S.அன்வர். இவர் காயல்பட்டினம் நகர அம்மா பேரவை செயலாளராகவும் உள்ளார். அவர் பேசிய வீடியோ பதிவு - சமூக ஊடகங்களில் - பரப்பப்பட்டுள்ளது.
அதில் நடப்பது என்ன? குழுமத்தை சார்ந்த ஐவர் மீது புகார் கொடுக்கப்பட்டதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய காவல்துறை - அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்ததாகவும், அதனை தொடர்ந்து நடப்பது என்ன? நிர்வாகிகள் - நகராட்சி விஷயத்தில் இனி தலையிடமாட்டோம் என எழுதிக்கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த உண்மையும் இல்லை.
காயல்பட்டினம் நகரில் மருத்துவ சேவை, கல்வி உட்பட பல்வேறு துறைகளில் உள்ள தேவைகளை நிறைவேற்ற - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) பல்வேறு முயற்சிகளை செய்து வருவதை பலரும் அறிவர். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இந்த சேவைகளில் ஒரு பகுதியாக - காயல்பட்டினம் நகராட்சியில் அரங்கேறிவரும் முறைக்கேடுகள் குறித்து நடவடிக்கை, தனியார் பள்ளிக்கூடங்கள் - கல்விக்கட்டணம் என்ற பெயரில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகம் வாங்குவது சம்பந்தமாக நடவடிக்கை போன்றவையும் அடங்கும்.
காயல்பட்டினம் நகராட்சியில் அரங்கேறிவரும் முறைக்கேடுகள் குறித்த புகார்கள் பல - மெகா அமைப்பு நிர்வாகிகள் மூலம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் (TAMIL NADU LOCAL BODIES OMBUDSMAN)- விசாரணையில் உள்ளது.
எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் - அரசு விதிமுறைகளை மீறி - ஸ்மார்ட் கிளாஸ் (SMART CLASS) என்ற பெயரில் வசூல் செய்யப்பட்ட சுமார் 36 லட்சம் ரூபாயினை (ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூபாய் 2400 வசூல்) திருப்பி செலுத்திட - மெகா அமைப்பின் முயற்சியினை தொடர்ந்து - தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும் - இவ்வாண்டு இதர கட்டணம் (MISCELLANEOUS FEE) என்ற பெயரில், அதே பள்ளி - ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூபாய் 3500 வசூல் செய்ய திட்டமிட்டது (சுமார் 50 லட்சம் ரூபாய்). இது சம்பந்தமாக மெகா அமைப்பு சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் எழுப்பியதை அடுத்து - அந்த முயற்சியினை அப்பள்ளிக்கூடம் கைவிட்டது.
இந்த பின்னணியில் - கடந்த ஜூன் மாதம், மெகா அமைப்பின் இரு நிர்வாகிகளுக்கும், (பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் மற்றும் எம்.எஸ்.முஹம்மது சாலிஹு) , மைதீன் அப்துல் காதர் என்ற சமூக ஆர்வலர் ஒருவருக்கும் - ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் இருந்து 4 அழைப்பாணைகள் வழங்கப்பட்டன.
நான்கு அழைப்பாணைகளில் மூன்று காயல்பட்டினம் நகராட்சியின் அப்போதைய பொறியாளர் சுரேஷ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையிலும், ஒரு அழைப்பாணை - காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு (KACF) சார்ந்த சாளை சலீம் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டது.
புகாரின் முழு விபரத்தை காவல்துறை தெரிவிக்கவில்லை; நகராட்சி பணிகளை செய்யவிடாமல் - மெகா அமைப்பு தடை செய்வதாக புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்ட இந்த அழைப்பாணைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மெகா அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவர் (எம்.எஸ்.முஹம்மது சாலிஹு) தொடுத்த வழக்கில் - அந்த அழைப்பாணைகளை - நீதிமன்றம் - ரத்து செய்தது.
மேலும் - சட்டத்திற்கு புறம்பாக ஆறுமுகநேரி காவல்நிலையம் அனுப்பிய அழைப்பாணை குறித்து - அப்போதைய உள்துறை செயலாளர் திரு நிரஞ்சன் மார்டி IAS அவர்களிடம் விரிவான மனுவும் வழங்கப்பட்டது. இது குறித்து முழு அறிக்கையை தான் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கோருவதாக - உள்துறை செயலர் உறுதியளித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க - இம்மாதம் 4 ஆம் தேதி, ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் இருந்து மெகா அமைப்பை சார்ந்த பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ், ஏ.எஸ்.புஹாரி, எம்.எம்.முஜாஹித் அலி மற்றும் ஜபருல்லாஹ் ஆகியோருக்கும், முஸ்தபா என்ற சமூக ஆர்வலர் ஒருவருக்கும் - ஒரு அழைப்பாணை வழங்கப்பட்டது.
அதில் காயல்பட்டினம் நகர அம்மா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர் என்பவர் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுத்த புகார் அடிப்படையில் விசாரணைக்கு - டிசம்பர் 8 அன்று, ஐவரும் - ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்டத்திற்கு புறம்பாக மீண்டும் வழங்கப்பட்ட இந்த அழைப்பாணை குறித்து - மெகா நிர்வாகிகள், உள்துறை செயலாளர் திரு எஸ்.கே.பிரபாகர் IAS அவர்களிடம் தெரிவித்தனர். மேலும் இதன் விபரங்கள் - தமிழக காவல்துறையின் DGP திரு ஜெ.கே.திரிபாதி IPS, சட்ட ஒழுங்குதுறை DGP திரு Dr.ஜெயந்த் முரளி IPS மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு அருண் பாலகோபாலன் IPS ஆகியோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் - தூத்துக்குடியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு அருண் பாலகோபாலன் IPS அவர்களை நேரடியாக சந்தித்த மெகா அமைப்பு நிர்வாகிகள் - ஆளும் கட்சியினர் சிலர், ஆறுமுகநேரி காவல்நிலையத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என எடுத்துரைத்தனர். விபரங்களை கேட்டறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இது குறித்து தான் - திருச்செந்தூர் வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பேசுவதாக தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மெகா நிர்வாகிகள் - திருச்செந்தூர் வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) திரு பரத் அவர்களை நேரடியாக - கடந்த வாரம் சந்தித்தனர்.
அப்போது அவரிடம் -
காயல்பட்டினம் நகராட்சியில் அரங்கேற்றப்படும் முறைக்கேடுகளை அம்பலப்படுத்தும் எமது அமைப்புக்கு எதிராக, சுயலாப நோக்கத்தில் செயல்புரியும் சிலர் - நீதிமன்றங்களில் மற்றும் விசாரணை செய்யும் அரசு துறைகளில் - எமது புகார்கள் மீது விளக்கம் அளிக்காமல், ஆறுமுகநேரி காவல்நிலையத்தை தவறாக பயன்படுத்த முனைகிறார்கள்.
ஆறுமுகநேரி காவல்நிலையமும் - எந்த முகாந்திரமும் இல்லாத, சட்டப்படி தாங்கள் கையில் எடுக்கக்கூடாத புகார்களை விசாரிக்கிறேன் என்ற பெயரில் - தொடர்ந்து இது போன்ற சட்டத்திற்கு புறம்பான அழைப்பாணைகளை அனுப்பி வருகிறது
என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் - இது போன்ற புகார்களை வருங்காலங்களில் வழங்கி, இடையூறு செய்யக்கூடாது என L.S.அன்வருக்கு அறிவுறுத்திட வேண்டியும் திருச்செந்தூர் வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இது தவிர - காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் முறைக்கேடுகள் குறித்து நடப்பது என்ன? குழுமம் கண்டுக்கொள்ளாது என எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.
இது தான் நடந்தது.
எல்.எஸ்.அன்வர் (அம்மா பேரவை நகர் செயலாளர்) வீடியோ பதிவில் கூறியவை முற்றிலும் உண்மை அல்ல.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|