காயல்பட்டினம் சொளுக்கார் தெரு, மகுதூம் தெரு ஆகிய தெருக்களில் புதிதாகத் தார் சாலை வருவதைத் தடுப்பது யார் என்பதை விளக்கி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் தவலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ஜூலை 25, 2017 இல் - காயல்பட்டினம் நகராட்சி - பாஸ் நகர் மூன்றாவது தெருக்கு சிமெண்ட் கல் பதித்த சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானம் எண் 1414.
இதே தீர்மானம் எண் (#1414) - பின்னர் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியியல் துறை அதிகாரிகளால் FORGERY செய்யப்பட்டு, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - அப்பாபள்ளி தெரு, சொளுக்கார் தெரு, மஃதூம் தெரு, செப்புக்குடைஞ்சான் தெரு, சதுக்கை தெரு வடக்கு பகுதி என்ற ஐந்து சாலைகளை - PAVER BLOCK கற்கள் சாலைகளாக அமைத்திட நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக மாற்றப்பட்டது.
முதலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், பின்னர் போர்ஜெரி செய்யப்பட்ட தீர்மானமும் வருமாறு:-
FORGERY செய்யப்பட்ட தீர்மானம் - நகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்படாததால், ஐந்து சாலைகளும் PAVER BLOCK கற்கள் கொண்ட சாலைகளாக போடப்படப்போவது அப்பகுதி மக்களுக்கு தெரியாது. விடப்பட்ட டெண்டர் திறக்கப்படும் வேளையிலேயே உண்மைகள் வெளிவர துவங்கின.
இத்தருணத்தில் (ஜனவரி 2018) - அப்பகுதி மக்களும், அப்பகுதி சார்ந்த ஜமாஅத் / பொது நல அமைப்புகளும், PAVER BLOCK சாலைகளுக்கு பதிலாக தரமான தார் சாலை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
ஜமாஅத் / பொது நல அமைப்புகள் கையெழுத்திட்ட மனுக்கள்:-
இதே கோரிக்கையை - செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களும் - உள்ளாட்சி துறை அமைச்சருக்கு பின்வருமாறு பரிந்துரையும் செய்தார்:-
ஆனால் - தான் இடமாற்றம் செய்யப்படும் வரை, தீர்மானத்தை FORGERY செய்த முன்னாள் ஆணையர் திரு பொன்னம்பலம் - தார் சாலை அமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதிதாக பொறுப்பேற்ற - ஆணையர் திரு பிரேம் ஆனந்த் - ஜூலை 31, 2018 அன்று அப்பாபள்ளி தெரு, சொளுக்கார் தெரு, மஃதூம் தெரு ஆகிய தெருக்களை PAVER BLOCK சாலைகளுக்கு பதிலாக, தார் சாலையாக மாற்றிட தீர்மானம் (#1623) நிறைவேற்றி, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு அனுப்பினார்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் - திரு பிரேம் ஆனந்த் - அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு இடமாற்றம் ஆகவே, ஆணையர் பொறுப்பு - நகராட்சியில் காலியானது. இந்த காலகட்டத்தில் - தூத்துக்குடி நகராட்சி ஆணையர் - காயல்பட்டினம் நகராட்சி பொறுப்புகளை கவனித்து வந்தார்.
தார் சாலையாக போட நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்த காயல்பட்டினம் நகராட்சி காலம்தாழ்த்திய காரணத்தால் - சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த தகவல் - நவம்பர் 2018 இல், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக கொண்டு செல்லப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 2019 இல் - கோரப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்துவிட்டதாக, மண்டல பொறியாளர் திருமதி சுப்புலட்சுமி தகவல் தெரிவித்தார். இடையில் வந்த பாராளுமன்ற தேர்தலை காரணம் காட்டி - அடுத்த கட்டம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மே 2019 இறுதியில் - டிசம்பர் 2018 இல் ஆணையரான திரு முருகன் ஓய்வு பெறவே, நகராட்சி பொறியாளர் திரு சுரேஷ் - ஆணையர் பொறுப்பினை பெற்றார். ஆனால், பொறுப்பேற்ற சில தினங்களில் - 2018 ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி, அப்பாபள்ளி தெருவில் - PAVER BLOCK கற்கள் கொண்டு சாலைகள் அமைக்க துவங்கினார். அவர் மீது எழுந்த சில புகார்கள் காரணமாக திரு. சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட, திருமதி புஷ்பலதா - பொறுப்பு ஆணையராக பதவியேற்றார்.
மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி அறிவுரைப்படி - அப்பாபள்ளி தெரு சாலை PAVER BLOCK சாலையாக போடப்பட்டதாகவும், சொளுக்கார் தெரு மற்றும் மஃதூம் தெரு சாலைகள் - தார் சாலைகளாக போடப்படும் என உறுதியளித்த அவர், ஆகஸ்ட் 9, 2019 அன்று இதற்கான தீர்மானத்தையும் (#1869) நிறைவேற்றினார்.
தார் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் ஆகிறது. ஆனால் - சொளுக்கார் தெருவிலும், மஃதூம் தெருவிலும் - இன்றைய தேதி வரை - தார் சாலை அமைக்கவில்லை.
காயல்பட்டினம் நகராட்சி (இரு முறை) நிறைவேற்றிய தீர்மானப்படி - விரைவில் தார் சாலைபோட மனுக்கள் மூலமும், வழக்கறிஞர் நோட்டீஸ் மூலமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் - நகரில் ஒரு சிலர், உண்மைக்கு புறம்பாக - மெகா | நடப்பது என்ன? குழுமம் - சாலைகள் போடப்படுவதை தடுப்பதாக விஷமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
தார் சாலை அமைப்பதை யார் தடுக்கிறார்கள்? ஏன் தடுக்கிறார்கள்?
இந்த கேள்விகளுக்கான விடை, தற்போது பொது மக்களுக்கு புரியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|