வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா) அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் நகரின் அனைத்துப்பள்ளிகளைச் சார்ந்த ஏழை மாணவ-மாணவியர் 39 பேருக்கு கல்விக் கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி 28.06.2011 அன்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை செயலரும், இக்ராஃ செயற்குழு உறுப்பினருமான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்ததோடு, நக்வா அமைப்பு குறித்து அறிமுகவுரையாற்றி, நிகழ்ச்சிகளையும் தொகுத்தளித்தார். நக்வா அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி உ.ம.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் ஆகியோர் நகர மாணவ-மாணவியரின் கல்விச் சூழல் குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அனைத்துப்பள்ளிகளைச் சார்ந்த 39 ஏழை மாணவ-மாணவியருக்கு சுமார் அறுபதாயிரம் ரூபாய் கல்விக்கட்டண உதவித்தொகை, அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
பின்னர், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் காஜா முகைதீன், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைமையாசிரியை ரூபி வசந்தா, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் ஆசிரியை நஸ் ரீன் ரஹ்மான் ஆகியோர் நக்வா அமைப்பிற்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர்.
டியூஷன் தேவையற்றது...
பள்ளிகளுக்கிடையில் நல்ல ஐக்கியம் வளர்க்கப்பட வேண்டும்...
மாணவ-மாணவியரின் கவனச் சிதைவுகள் போக்கப்பட வேண்டும்...
புத்தகச் சுமைகள் குறைக்கப்பட வேண்டும்...
மாணவர்களுள் ஒளிந்துள்ள திறமைகளை இனங்கண்டு அதனடிப்படையில் அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்...
பணத்தை அடிப்படையாக வைத்து மேற்படிப்பைத் தேர்வு செய்யக்கூடாது...
மாணவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் அவ்வப்போது வழங்கப்பட வேண்டும்...
போன்ற கருத்துக்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்தில், அமீரக காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை, எஸ்.ஆர்.பி.ஜஹாங்கீர், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தகவல்:
உ.ம.ஷாஹுல் ஹமீத்,
உள்ளூர் பிரதிநிதி,
வட அமெரிக்க காயல் நல மன்றம் - நக்வா. |