விண்வெளியில் பயணம் செய்யவேண்டும் என்பது நம் பலரின் ஆசைகளில் ஒன்று. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) உதவி மூலம் இவ்வாய்ப்பு நம் புகைப்படத்திற்கு இப்போது கிடைத்துள்ளது!
நாசாவின் முப்பது ஆண்டு கால விண்வெளி ஓட பயணங்கள் (SPACE SHUTTLE MISSIONS) ஜூலை 8 அன்று ஏவப்பட உள்ள அட்லாண்டிஸ் (ATLANTIS) விண்வெளி ஓடப்பயணத்துடன் நிறைவுபெறுகிறது. இறுதி ஓட்டத்தில் நான்கு விஞ்ஞானிகள் பயணம் செய்கிறார்கள்.
டிஸ்கவரி மற்றும் எண்டவர் விண்வெளி ஓடங்கள் - கடந்த சில மாதங்களுக்கு முன்னர் - அதன் இறுதி பயணத்தை மேற்கொண்ட போது - ஆர்வலர்கள் தங்கள் புகைப்படத்தை இணையதளம் மூலம் அனுப்ப நாசா கூறியிருந்தது. அப்புகைப்படங்கள் விண்வெளி ஓடத்தில் பயணம் செய்யும் என்றும், புகைப்படம் அனுப்ப விரும்பாதவர்கள் தங்கள் பெயர்களை மட்டும் அனுப்பலாம் என்றும் நாசா மேலும் கூறியிருந்தது. விண்வெளி ஓடம் பூமி திரும்பியவுடன் இணையதளம் மூலம் பதிவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் (இணையதளம் மூலம்) வழங்கப்படும் என்றும் நாசா தெரிவித்திருந்தது.
நாசாவின் அவ்வறிவிப்பினை தொடர்ந்து இந்தியாவில் இருந்து சுமார் 20,000 பேர் உட்பட - உலகின் பல நாடுகளில் இருந்து சுமார் 200,000 பேர் இப்பயணத்தை மேற்கொண்டனர்.
நாசாவின் விண்வெளி ஓட பயணங்களில் இறுதி பயணமான அட்லாண்டிஸ் விண்வெளி ஒடப்பயணம் ஜூலை 8 அன்று திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து அப்பயணத்திற்கு தங்கள் புகைப்படத்தை அனுப்ப விரும்புவோர் - காயல்பட்டினத்தில் மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமியை அணுகலாம். இதற்கான ஏற்பாடுகளை காயல்பட்டினம் வானவியல் சங்கம் செய்துள்ளது. விருப்பம் உள்ளோர் விண்ணப்பத்தை நிரப்பி, தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் - மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமியில் - கொடுக்கவும்.
பதிவு செய்பவர்கள் 13 வயதை தாண்டியவராக இருக்க வேண்டும். அட்லாண்டிஸ் ஜூலை 20 அன்று பூமி திரும்பியதும், பயணச் சான்றிதழ் - பங்கேற்போருக்கு - இலவசமாக வழங்கப்படும்.
நேரடியாக பதிவு செய்ய விரும்புவோர் பதிவு செய்வதற்கான இணையதள முகவரி faceinspace.nasa.gov. வெற்றிகரமாக பதிவு செய்தவுடன் ஒப்புதல் எண் (Acknowledgement Number) வழங்கப்படும்.
தகவல்:
www.kayalsky.com
|