ஹாங்காங்கில் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் 3ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 18.06.2011 அன்று ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூன்றாமாண்டு பொதுக்குழுக் கூட்டம் கடந்த 18.06.2011 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில், மவ்லவீ ஹாஃபிழ் ஹாஜி கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது. இளம் ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
அமைப்பின் துணைத்தலைவரும், இக்கூட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தவருமான எம்.செய்யித் அஹ்மத் பி.இ. அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவரைத் தொடர்ந்து, பேரவையின் கடந்த பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அத்தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்டமை குறித்து பேரவை செயலாளர் யு.ஷேக்னா விளக்கிப் பேசினார்.
பின்னர், பேரவையின் மூன்றாமாண்டு அறிக்கையை அதன் தலைவர் அப்துல் அஜீஸ் சமர்ப்பித்தார். பின்னர், இவ்வாண்டின் வரவு-செலவு கணக்கை பேரவை பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் சமர்ப்பிக்க, அதற்கு கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளித்தது.
பின்னர், கூட்டத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் சிறப்புரையாற்றினார். ஒற்றுமையின் அவசியம், ஒற்றுமையுடன் செயல்படுவதால் சமுதாயம் பெறும் மகிழ்ச்சி, பலன்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பேரவையின் பணிகளை அவர் பாராட்டிப் பேசிய அதே நேரத்தில், உலகின் இதர காயல் நல மன்றங்களின் செயல்பாடுகளைக் காணுகையில், ஹாங்காங் பேரவையின் பணிகள் மிகவும் சொற்பமாகவே உள்ளதென அவர் தெரிவித்தார்.
அக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், ஹாங்காங்கில் வாழும் காயலர்களில் இதுவரை உறுப்பினராகாதோர், நகர்நலன் கருதி விரைவாக தம்மை இப்பேரவையில் உறுப்பினர்களாக்கிக் கொள்ள வேண்டும் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார். அவ்வாறு அனைத்து காயலர்களும் இப்பேரவையில் உறுப்பினர்களாகிவிட்டால், பிற மன்றங்களைப் போலவோ, அவற்றை விடவும் சிறப்பாகவோ இப்பேரவையும் நகர்நலக் காரியங்களை முனைப்புடன் செயல்படுத்தி, நாயனின் நல்லருளைப் பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பேரவையின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்வதற்குத் தேவையான பொருளாதார ஒத்துழைப்புகளையும் வாரி வழங்கி இறையருளை நிறைவாகப் பெற்றிடுமாறு அவர் கூட்டத்தில் கலந்துகொண்டோரை கேட்டுக்கொண்டு, பேரவையின் பணிகள் சிறக்க வாழ்த்தி துஆச் செய்து தனதுரையை முடித்துக்கொண்டார்.
பின்னர் இஷா தொழுகைக்காக கூட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. தொழுகையைத் தொடர்ந்த கூட்டத்தில், பேரவையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா கருத்துரை வழங்கினார்.
பேரவையின் பணிகளைப் பாராட்டிப் பேசிய அவர், அப்பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள அன்பர்களுக்க அவர்களின் இல்லத்தரசிகள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார். ஹாங்காங் வாழ் காயலர்கள்தான் ஊர்நலன்களில் பங்குபெற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர், இன்றும் திகழ்கின்றனர், இன்னும் சிறப்பாக இனியும் திகழ்வர் என்றார். இப்பேரவையில் அனைத்து காயலர்களும் தம்மை உறுப்பினர்களாக்கிக் கொண்டு சமுதாய, சமூகப் பணிகளை அதிகமதிகம் ஆற்றிட வேண்டுமென ஆவலுடன் கேட்டுக்கொண்டார்.
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துப்பரிமாற்றம் செய்ய நேரம் வழங்கப்பட்டது.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின்போது, நமதூர் காயல்பட்டினத்தில் அரசியல் கட்சிகளின் ஈடுபாடு உள்ளதாகவும், இதனால் பிரச்சினைகள் ஏற்படுமெனவும் ஒரு சகோதரர் குறிப்பிட்டதையடுத்து அங்கு சலசலப்பும், எதிர்கருத்தும் அவையினை அமைதியிழக்கச் செய்தது.
அந்நேரத்தில் குறுக்கிட்டுப் பேசிய பேரவைத் தலைவர், அரசியல் தொடர்பான எந்தப் பேச்சுக்களையும் இங்கு பேசாதிருக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பேசிய கூட்டத் தலைவர், இப்பிரச்சினையை ஊரிலுள்ள பெரியவர்களும், ஜமாஅத்தார்களும் பார்த்துக்கொள்ளட்டும் என்றும், பேரவையின் நிகழ்வுகளில் அரசியல் தொடர்பான விவாதம் அவசியமற்றது... அதை விடுத்து, சமுதாய நலப்பணிகள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களைக் கூறுமாறும் கூறி, ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இறுதியாக, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, கூட்டத்தலைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில், திரளான காயலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவையான இரவு உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
அண்மையில் நம்மை விட்டும் மறைந்த ஹாங்காங் இளைய தலைமுறையின் இமாம் மர்ஹூம் என்.எச்.ஷாஹுல் ஹமீத், பேரவையின் நியமனக் கமிட்டி உறுப்பினர் மர்ஹூம் ஹாஜி கே.ஏ.ஜே.செய்யித் அஹ்மத் ஆகியோர் குறித்து கூட்டத்தில் நினைவுகூரப்பட்டு, அவர்களின் பாவப்பிழை பொறுப்பிற்காக பிரார்த்திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
பொருளாளர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங். |