உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பாக, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” என்ற தலைப்பில், 24.06.2011 வெள்ளிக்கிழமை மாலையில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் பரிசளிப்பு விழாவும், மறுநாள் 25.06.2011 சனிக்கிழமை காலையில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் மாநிலத்தின் முதன்மாணவி ஓசூரைச் சார்ந்த கே.ரேகாவுடன், காயல்பட்டினம் நகர பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
கலந்துரையாடல் நிகழ்ச்சி:
கலந்துரையாடல் நிகழ்ச்சி, 25.06.2011 அன்று காலை 10.00 மணிக்கு துவங்கியது. அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எம்.ஏ.ஷேக் முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றார். தலைமையுரையைத் தொடர்ந்து, இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், சாதனை மாணவி கே.ரேகா குறித்து அறிமுகவுரையாற்றினார்.
நேர்காணல்:
பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில், மாநிலத்தின் முதன்மாணவியான ஓசூரைச் சார்ந்த கே.ரேகாவை, இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நேர்காணல் செய்தார்.
சாதனை மாணவியின் அன்றாட வாழ்க்கை முறை, நேர மேலாண்மை, இலட்சியம், வீட்டில் பெற்றோர் - பள்ளியில் ஆசிரியர்கள் - வெளியில் நண்பர்களின் ஒத்துழைப்புகள், வருங்காலத் திட்டம், காயல்பட்டினம் மாணவ-மாணவியருக்கு அவர் கூற விரும்பும் அறிவுரை உள்ளிட்டவை குறித்து அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சாதனை மாணவி கே.ரேகா விரிவாகவும், விரைவாகவும் பதிலளித்தார்.
இந்த நேர்காணலின்போது அவர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:-
நான் புற்றுநோய் மருத்துவத் துறையில் தலைசிறந்த நிபுணராக ஆசைப்படுகிறேன்... அதன் துவக்கமாக, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்துள்ளேன்...
பெற்றோர் ஒத்துழைப்பு...
படிக்கும் காலத்தில் எனது தாயாரின் ஒத்துழைப்பு எனக்கு நிறைவாகக் கிடைத்தது... எனது உடல் நலன் விஷயத்தில் அவர் என் மீது தனி அக்கறை வைத்திருந்தார்... எங்கள் வீட்டில் யாரும் டிவி பார்ப்பதில்லை. என் தாயாருக்கு அதற்கு நேரமுமில்லை.
தாயின் அக்கறை...
என் தந்தை அவரது பணிக்குச் சென்று வருவதற்கே போதிய நேரம் இல்லாததால், பணி முடித்து வீட்டிற்குத் திரும்பும் அவருக்கு முழு ஓய்வளிக்கும் விதமாக என் தாயார் அவருக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கும் அதே நேரத்தில், பிள்ளைகளாகிய எங்களுக்குத் தேவையானவற்றையும் நிறைவாக செய்து தருவார். குறிப்பாக, எங்களுக்கு அவர் ஆயத்தம் செய்து தரும் உணவில் எண்ணெய் மிகவும் குறைவாகவே சேர்க்கப்படும். ஒருவனை உடல் மற்றும் உளச்சோர்வடையும் விஷயத்தில் எண்ணெய்யின் பங்களிப்பு அதிகம் உள்ளது என நாங்கள் தெரிந்து வைத்திருந்ததே அதற்கான காரணமாகும்...
டியூஷன்...
நான் டியூஷன் சென்றதில்லை. அன்றாடம் பள்ளியில் நடைபெறும் பாடங்களை - அப்பாடத்தை நடத்தும் ஆசிரியர்களிடம் அன்றன்றைக்கே கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வேன்... ஒருவேளை பின்னர் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், எனது ஆசிரியர்களுடன் தொலைபேசி வழியே தொடர்புகொண்டு என் சந்தேகத்தைப் போக்கிக் கொள்வேன்... எனது ஆசிரியர்களும் சிறிதும் ஆர்வம் குறையாமல் எனது கேள்விகளுக்கு விளக்கம் தருவார்கள்...
நண்பர்கள்...
எனக்கு நண்பர்கள் வட்டம் மிக மிகக் குறைவு... எங்கள் வகுப்பில் அனைவருமே நன்கு படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்தவர்கள் என்பதால், எங்களுக்குள் எப்போதாவதுதான் அரட்டைகள் இருக்கும்.... எங்கள் கவனம் முழுவதும் இந்த ப்ளஸ் 2 தேர்வை நன்முறையில் சந்தித்து நம் வாழ்வை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒன்றில்தான் இருக்கும்...
இவ்வாறு பல்வேறு கருத்துக்களை மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா தெரிவித்தார்.
பின்னர் அனைத்துப்பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் பார்வையாளர்கள் அவரிடம் பல்வேறு சந்தேகங்களைக் கேள்விகளாகக் கேட்டனர்.
அதற்கு அவர் விளக்கமளிக்கையில்,
சண்டை போடுங்கள்...
படிக்கும் பாடத்துடன் சண்டை போடுங்கள் நண்பர்களே... முடியாது என்று நினைப்பதே நம்மை முடியாமல் ஆக்கி வைக்கப் போதுமானது. முடியாதவற்றையும் கூட “இது ஏன் எனக்கு முடியாது? நிச்சயம் முடியும்!” என்று உறுதியாக நினைத்துக்கொண்டு செய்து பாருங்கள்... நிச்சயம் அது பலன் தரும்...
படிக்கும்போது, ஆட்காட்டி விரலை படிக்கும் வரியின் மீது வைத்தவாறு படியுங்கள்... ஆட்காட்டி விரலுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை நான் அனுபவித்துள்ளேன். குறிப்பாக ஒரு மதிப்பெண் கேள்விகள் விஷயத்தில் இம்முறையைக் கையாண்டால் நிச்சயம் அது மறக்கவே மறக்காது...
சிந்தனையை சிதற விடாதீர்கள்...
படிக்கும்போது ஒரே சிந்தனையுடன் படியுங்கள்... பல வேலைகளை உங்களுக்குள் சிந்தித்துக்கொண்டே படிக்காதீர்கள். ஏதேனும் வேலையிருந்தால் அதை முடித்துவிடுங்கள்... பின்னர் படியுங்கள்...
இந்த ஒரு வருடம்தான் உங்களுக்கு பள்ளிப் பருவம்... எனவே, பொழுதுபோக்குகளை இந்த ஒரு வருடத்திற்கு மட்டும் முழுமையாக ஒத்தி வைத்துவிடுங்கள்... அது உங்கள் வாழ்க்கை முழுவதும் பலன் தந்துகொண்டேயிருக்கும்.
தேவையிருந்தால் மட்டுமே டியூஷன் செல்லுங்கள்... இயன்ற வரை அனைத்துப் பாடங்களுக்கான விளக்கங்களையும் பள்ளியிலேயே ஆசிரியர்களிடம் கேட்டறிந்துகொள்ளுங்கள...
உங்களுக்குத்தான் அதிக வாய்ப்பு...
நாங்களெல்லாம் மாநிலத்தின் முதன்மாணவராக வருவோரை டிவி அல்லது செய்தித்தாள் வழியாகத்தான் பார்த்திருக்கிறோம்... ஆனால், காயல்பட்டினத்தைச் சார்ந்த மக்களாகிய நீங்களோ ஆண்டுதோறும் அவர்களோடு நேரடியாக கலந்துரையாடுகிறீர்கள்... எனவே, சாதனை செய்வதற்கு மற்ற அனைவரையும் விட உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது... எனவே, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, வரும் ஆண்டில் காயல்பட்டினத்திலிருந்து - இங்கிருக்கும் உங்களில் ஒருவர் மாநிலத்தின் முதன்மாணவராக வரவேண்டும் என்பது எனது ஆசை...
நகர மக்கள்...
இந்த நகருக்கு நான் வந்ததிலிருந்து இவர்களின் நடவடிக்கைகளை நன்கு கவனித்தேன்... ஏதோ என்னுடன் பத்தாண்டுகள் பழகிய மக்களைப் போல பாசத்தோடும், இணக்கமாகவும் நடந்துகொண்டார்கள்... அது என்னை மிகவும் மகிழச் செய்துள்ளது...
இவ்வாறு மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா தெரிவித்தார். பார்வையாளர் கேள்வி நேரத்தை ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் அப்துல் காதிர் நெய்னா ஒருங்கிணைத்தார்.
தன் மகளை தான் அக்கறையுடன் பார்த்துக்கொண்ட விதம் குறித்து அவரது தாயாரும் கருத்து தெரிவித்தார். காயல்பட்டினம் நகர மாணவ-மாணவியரை அவரது தாய்மாமா வெற்றிவேல் வாழ்த்திப் பேசினார்.
வாழ்த்துரை:
பின்னர், அவரை வாழ்த்தி காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் அஹ்மத் சுலைமான் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இறுதியாக இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் நன்றி கூற, துஆவுக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நகர சாதனை மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வும் தன் பெற்றோருடன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.
கலந்துகொண்டோர்:
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவியரும்,
இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், ஜித்தா காயல் நற்பணி மன்ற துணைச் செயலாளர் எஸ்.எச்.அப்துல் காதிர், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.புகாரீ, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், காயல் வெல்ஃபர் ட்ரஸ்ட் செயலர் ஹாஜி ஆதம் சுல்தான், ஜித்தா ஹாஜி பிரபு ஜெய்லானீ, அமீரக காயல் நல மன்றத்தைச் சார்ந்த எம்.இ.ஷேக்,
என்.டி.ஷெய்கு மொகுதூம், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆசிரியர் ஏ.எல்.பஷீருல்லாஹ் உள்ளிட்ட பார்வையாளர்களும் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மோர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடு:
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஒருங்கிணைப்பில், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களும், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்கள் பி.ஏ.புகாரீ, எஸ்.எம்.ஐ.ஜக்கரிய்யா ஆகியோரும், காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினரும் செய்திருந்தனர்.
|