இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்த மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் தனித்தனியாகவும், ஒருங்கிணைந்தும் அவ்வப்போது கூடி பல்வேறு முடிவுகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் மாநாட்டு ஏற்பாட்டுப் பணிகளை முனைப்புடன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநாட்டுப் பந்தல் - மேடை ஏற்பாடுகள் குறித்து இறுதிகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, மாநாட்டு விழாக்குழுவின் கடைசி கலந்தாலோசனைக் கூட்டம் 05.07.2011 அன்று (நேற்று) காலை 10.30 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுப் பந்தலில் நடைபெற்றது.
ஹாஜி ஷெய்க் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். விழாக்குழு தலைவர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, விழாக்குழு சார்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும், இனி செய்யப்பட வேண்டிய இறுதிகட்ட பணிகளையும் பட்டியலிட்டு விளக்கிப் பேசினார்.
பின்னர் நடந்த கருத்துப் பரிமாற்றத்தையடுத்து, இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்டதுடன், புதிதாகவும், விரைவாகவும் செய்து முடிக்கப்பட வேண்டிய இறுதிகட்டப் பணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவற்றுக்கும் கூட்டம் ஒப்புதலளித்தது.
இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசனையின்படி, மாநாட்டுப் பந்தலில் குடிநீர் வினியோக வளாகம், புத்தக வளாகம், தகவல் நடுவம், மருத்துவ முதலுதவி வளாகம் உள்ளிட்டவற்றை அமைப்பதென்றும், மாநாட்டிற்கு வெளியூர்களிலிருந்து வருகை தரவிருக்கும் பேராளர்கள் மற்றும் மாநாட்டு நிர்வாகிகளுக்கு பார்வையாளர்கள் பகுதியின் முன்புறத்தில் தனி இருக்கை வசதிகள் செய்வதென்றும், பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய 35 பேர் கொண்ட குழுவை மாநாட்டு ஏற்பாட்டுப் பணிகளுக்கான தன்னார்வக் குழுவினர்களாக நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி எம்.ஏ.காதர் அலீ, ஹாஜி தைக்கா சாமு, ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஜே.ஏ.லரீஃப், பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ், ஹாஜி மு.த.ஜெய்னுத்தீன், ஹாஜி எல்.எஸ்.அன்வர், எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், எம்.எச்.அப்துல் வாஹித், நேஷனல் காஜா, எம்.எஸ்.நூர் முஹம்மத், சி.எஸ்.சதக்கத்துல்லாஹ், எஸ்.எம்.செய்யித் காஸிம், எம்.எச்.எம்.சதக்கத்துல்லாஹ், பி.எஸ்.அப்துல் காதிர் நெய்னா, எம்.எல்.ஹாரூன் ரஷீத், எஸ்.கே.ஸாலிஹ், எஸ்.ஏ.ஷேக் சுலைமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
|