காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெற்றது.
அதிகாலை நிகழ்ச்சிகள்:
03.07.2011 அன்று இவ்வாண்டின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று அதிகாலை 05.15 மணிக்கு, இறைமறை வசனங்களுடன் ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் இறுதிநாள் நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, குருவித்துறைப் பள்ளிவாசல் மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ புகாரிஷ் ஷரீஃப் நிறைவுப் பகுதியை துவக்கமாக ஓதினார்.
காலை நிகழ்ச்சிகள்:
அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சென்னை மதீனத்துல் இல்ம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, கூட்டு துஆவின் சிறப்புகள் என்ற தலைப்பில் திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் ம்வலவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ உரையாற்றினார். பின்னர், மவ்லவீ பி.கே.முஹம்மத் பாதுஷா ஷக்காஃபீ மலையாளத்தில் உரையாற்றினார். தொடர்ந்து, அபூர்வ துஆ நிகழ்ச்சி குறித்த அறிமுகத்தை நஹ்வீ எம்.எம்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா வழங்கினார்.
அபூர்வ துஆ பிரார்த்தனை:
இறுதியாக, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ இமாம் மவ்லானா செய்யித் அஹ்மதிப்னு ஜெய்னீ தஹ்லான் அவர்களால் தொகுக்கப்பட்ட கத்முல் புகாரிஷ் ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஓதி நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
இந்த அபூர்வ துஆ பிரார்த்தனையில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். மேலும், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களிலிருந்தும், இதர வெளியூர்களிலிருந்தும் பெருந்திரளானோர் பேருந்து, தொடர்வண்டி மற்றும் தனி வாகனங்களில் வந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
சிறப்பு ஏற்பாடுகள்:
மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கே.எம்.டி. மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவ உதவிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கைக்காக தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
புகாரிஷ் ஷரீஃப் வளாகத்திற்குள் இடநெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, முத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, குருவித்துறைப் பள்ளி வளாகம், அப்பள்ளியின் மையவாடி பகுதிகளில் இருந்தவாறு ஆண்கள் துஆ இறைஞ்சினர். பெண்களுக்கு புகாரிஷ் ஷரீஃப் பெண்கள் பகுதி, அதன் வடக்குப்புற வளாகம், பெரிய முத்துவாப்பா தைக்கா வளாகம், ஈக்கியப்பா தைக்கா வளாகம் ஆகிய பகுதிகளில் இடவசதி செய்யப்பட்டிருந்தது. அனைத்துப் பகுதிகளிலும், பொதுமக்கள் தாகம் தனிப்பதற்காக குடிநீர் வினியோகம் தொடர்ச்சியாக செய்யப்பட்டது.
துஆ நிறைவுற்றதும், துஆ இறைஞ்சிய ஆலிமை ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபி பைத் முழக்கத்துடன் நகர்வலமாக அவரது இல்லம் வரை அழைத்துச் சென்றனர்.
மாலை நிகழ்ச்சிகள்:
அன்று மாலையில் இறுதி நாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. ஹாஃபிழ் வெள்ளி எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி மாலை நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பின்னர், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் தலைமையில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. மவ்லவீ சொளுக்கு ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் மஹ்ழரீ துஆவுடன் மாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பின்னர், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம்., புகாரிஷ் ஷரீஃப் கணக்கர் ஹாஜி எஸ்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் நேர்ச்சைப் பொருட்களை ஏலம் விடும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இரவு நிகழ்ச்சிகள்:
அன்றிரவு இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றை நினைவுகூரும் வகையில் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மாணவர்கள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், மாதிஹுல் கவ்து மர்ஹூம் அல்லாமா சே.கு.நூஹுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்க் தாவூத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
ராத்திப் மஜ்லிஸைத் தொடர்ந்து, புகாரிஷ் ஷரீஃப் வளாக வளைவுகளில் பதியப்பட்டுள்ள நபிமொழிகளுக்கு, ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ விளக்கவுரை வழங்கினார்.
இறுதியாக, புகாரிஷ் ஷரீஃப் நடப்பாண்டு வைபவக் கமிட்டி தலைவர் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ கே.எஸ்.கிழுறு முஹம்மத் துஆவுடன் இறுதிநாள் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நேர்ச்சை வினியோகம்:
மறுநாள் 04.07.2011 காலை 06.00 மணி முதல் 08.30 மணி வரை பொதுமக்களுக்கு நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளையும், புகாரிஷ் ஷரீஃப் நிர்வாகத்தினர் ஒருங்கிணைப்பில், வைபவக் கமிட்டியினர் செய்திருந்தனர்.
அபூர்வ துஆ நேரலை:
புகாரிஷ் ஷரீஃபின் தினசரி நிகழ்ச்சிகள் வலைதளம் மூலம் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டதைப் போல, இந்த அபூர்வ துஆ நிகழ்ச்சியும் நேரலை செய்யப்பட்டது. சஊதி அரபிய்யா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தர், பஹ்ரைன், ஹாங்காங், சிங்கப்பூர், இலங்கை, தான்ஸானியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தவாறு பொதுமக்கள் இந்நேரலையின் துணையுடன் துஆவில் பங்கேற்றனர்.
ஹாங்காங், சிங்கப்பூர், தான்ஸானியாவில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை நிர்வாகிகளான ஹாஜி எஸ்.எம்.கபீர், ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத் உள்ளிட்ட திரளான காயலர்கள் ஹாங்காங்கிலிருந்தவாறு துஆ இறைஞ்சினர்.
தகவல் மற்றும் படங்கள்: ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ் பி.இ.
சிங்கப்பூரிலிந்தவாறு மவ்லவீ நஹ்வீ முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ, அஹ்மத் ஃபுஆத் உள்ளிட்ட காயலர்கள் துஆவில் பங்கேற்றனர்.
(தகவல் மற்றும் படங்கள்: மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ)
தான்ஸானியாவிலிருந்தவாறு தீவுத்தெருவைச் சார்ந்த இளைஞர்கள் துஆவில் பங்கேற்றனர். துஆ நிறைவுற்றதும், அங்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(தகவல் மற்றும் படங்கள்: ரிஃபாயீ)
தொகுப்பு:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
M.H.ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டது.
|