காஸ் இணைப்புகள் பற்றிய விவரத்தை ரேஷன் கார்டுகளில் பதிவு செய்வதற்காக, மக்களை அலைக்கழிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, ரேஷன் கடைகள் மூலம், குறைந்த விலையில் மண்ணெண்ணெய் விற்று வருகிறது. ஒரு காஸ் சிலிண்டர் மட்டும் உள்ள குடும்பங்களுக்கு மாதம், 3 லிட்டர் மண்ணெண்ணெய், சிலிண்டர் இணைப்பு இல்லாதவர்களுக்கு, மாதம், 10 லிட்டர் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இரண்டு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் கிடையாது.
இந்நிலையில், பல குடும்ப அட்டைதாரர்கள், தங்களது காஸ் இணைப்புகளை மறைத்து, தொடர்ந்து மண்ணெண்ணெய் பெற்று வந்தனர். இதை தடுப்பதற்காக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், தாங்கள் காஸ் சிலிண்டர் பதிவு செய்ய வரும் போது, தங்களது ரேஷன் அட்டையையும் கொண்டு வந்து, அதில் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்ய வேண்டுமென முன்பு உத்தரவிடப்பட்டது. இதன்படி, பெரும்பாலான ரேஷன் கார்டுகளில், சிலிண்டர் இணைப்பு பற்றிய விவரம் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டதாலும், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைவாக உள்ளதாலும், காஸ் சிலிண்டர் வைத்துள்ளவர்கள், மண்ணெண்ணெய் பெறுகின்றனரா என்பதை கண்டறிய முயற்சிக்கப்பட்டது. இதற்காக, காஸ் ஏஜன்சிகளுக்கு வந்து, ரேஷன் கார்டுகளை காண்பித்து, இணைப்பு பற்றிய விவரத்தை பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதனால், பல இடங்களில் ஒரே நேரத்தில் மக்கள் குவிந்து, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களுக்கும் அதிக சிரமம் ஏற்பட்டது.
இதுபற்றி முடிவெடுக்க, உயரதிகாரிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதில், ஏற்கனவே தமிழக உணவுத் துறை வசம், சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள குடும்பத்தினர் பட்டியல் உள்ளது என்பதாலும், எண்ணெய் நிறுவனங்கள் வசமும் சிலிண்டர் இணைப்பு பெற்ற குடும்பங்களின் பட்டியல் உள்ளது என்பதாலும், மக்களை அலைக்கழிக்க வேண்டாமென முடிவு செய்யப்பட்டது. இதன்படி, உணவுத் துறை வசம் உள்ள சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் பட்டியல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வசம் உள்ள பட்டியல் ஆகியவை ஒப்பிடப்பட உள்ளது. இப்பட்டியலில் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதனடிப்படையில், அந்தந்த ரேஷன் கடைகள் அல்லது காஸ் ஏஜன்சிகள், அந்த அட்டைதாரர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களை மட்டும் வரவழைத்து, ரேஷன் கார்டுகளில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களுக்கு பெரும் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், மீண்டும் மீண்டும், ரேஷன் கார்டுகளில் பதிவு செய்வது, அதற்காக கூட்டம் கூடுவது போன்ற விரயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. விரைவில், காஸ் இணைப்பு உள்ளவர்கள் பட்டியல் தயாரானதும், அதில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
காஸ் இணைப்பை இதுவரை ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யாதவர்கள், தாங்களாக முன்வந்து, அதை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்படும். இதன்பின், அந்தந்த கார்டுகளுக்கான மண்ணெண்ணெய் சப்ளை நிறுத்தப்படும். ஒரு காஸ் சிலிண்டர் மட்டும் வைத்துள்ளவர்களுக்கு மூன்று லிட்டர் மண்ணெண்ணெயும், சிலிண்டர் இணைப்பு இல்லாதவர்களுக்கு, 10 லிட்டர் மண்ணெண்ணெயும் மாதந்தோறும் வழங்கப்படும். இந்த நடவடிக்கை காரணமாக, மண்ணெண்ணெய் சப்ளை அளவு வெகுவாக குறையும் என்றும், தகுதியுள்ள அனைவருக்கும் வருங்காலத்தில் மண்ணெண்ணெய் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும், உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி:
தினமலர் (08.07.2011) |