தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 7 ஆயிரத்து 781 பெட்டிகள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், அதனை தேர்தலில் முழுமையாக பயன்படுத்தலாம் என்று சென்னை தேர்தல் ஆணையத்தில் இருந்து ஆய்வுக்கு வந்த அதிகாரி சம்பத் திருப்தி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் பட்டியல் பெறப்பட்டு அதில் இருந்து வார்டு வாரியாக வாக்காளர் பிரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் செல்வராஜ் நேரடி மேற்பார்வையில் நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து வளர்ச்சி) லோகநாதன், சிரஸ்தார் பழனி, தேர்தல் பிரிவு மாசாணம் மற்றும் ஊழியர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தக் கூடிய வாக்குப் பெட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகளில் நல்ல நிலையில் உள்ள பெட்டிகள் தவிர சிறிது பழுதான நிலையில் உள்ள பெட்டிகள் அனைத்தும் அந்தந்த யூனியன் அலுவலகத்தில் வைத்து பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து செக்ஷன் அதிகாரி சம்பத், உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தூத்துக்குடி வந்தனர். கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, உடன்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பெட்டி பழுது பார்க்கும் பணியினை ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 519 வாக்குப் பெட்டிகளும், தூத்துக்குடி யூனியனில் உள்ள ஆயிரத்து 188 பெட்டிகளும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 707 வாக்கு பெட்டிகள் நல்ல நிலையில் இருக்கிறது. 2 ஆயிரத்து 74 பெட்டிகள் பழுதுபார்க்கும் பணி 12 யூனியன்களிலும் நடக்கிறது. இந்த பெட்டிகள் சரிபார்ப்பு பணியினையும் சென்னை தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு பெட்டியாக பார்த்தனர். பழுது பார்க்கும் பணிகள் நல்ல முறையில் நடப்பதாக குழுவினர் திருப்தி தெரிவித்தனர். மொத்தம் இம்மாவட்டத்தில் 7 ஆயிரத்து 781 வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் இருக்கும். இம்மாவட்டத்திற்கு எத்தனை வாக்குச்சாவடி அமைகிறது என்பதை பொருத்து கூடுதல் பெட்டி தேவையா அல்லது இருக்கிற பெட்டிகள் போதுமானதா என்பது தெரியும்.
மாநில தேர்தல் ஆணைய குழு ஆய்வின்போது பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி லோகநாதன், சிரஸ்தார் பழனி, தேர்தல் பிரிவு மாசாணம் ஆகியோர் உடனிருந்தனர். தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஏற்கனவே தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள பல்வேறு பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதனையும் பார்வையிட்டனர்.
சென்னையில் 12இல் முக்கிய ஆலோசனை: இன்று ஆழ்வார்திருநகரி, கருங்குளம் யூனியனில் மாநில தேர்தல் ஆணைய குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் சம்பந்தமாக ஆலோசிக்க சென்னையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைத்து மாவட்டத்தில் உள்ள டெவலப்மென்ட் பிரிவு சிரஸ்தார்கள், தேர்தல் பிரிவு உதவியாளர்களுடன் வரும் 12ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதில் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக தெரிவிப்பார்கள். இந்த கூட்டத்திற்கு பின்னர்தான் தேர்தல் சம்பந்தமான பணிகள் கூடுதல் சுறுசுறுப்பாக நடக்கும் என்று தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:
தினமலர் (08.07.2011) |