தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற பின் - அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்த முந்தைய ஆட்சியின் திட்டங்களில் ஒன்று கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம். இத்திட்டத்தை மாற்றி அமைத்து, புதிய வடிவில் அமல்படுத்த இருப்பதாக தமிழக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஏழை, எளிய மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அவர்களின் குடும்பங்களில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே வறுமையை முழுமையாக ஒழிக்க முடியும் என்ற உண்மையை எனது அரசு நன்கு உணர்ந்துள்ளது. இதனை நிறைவேற்றும் முகத்தான், ஏழை, எளிய குடும்பங்களில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி, அந்தக் குடும்பங்கள் வறுமையின்
பிடியிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.
ஏழை, எளிய மக்கள், தங்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காக அளிக்கப்படும் சலுகைகளை மட்டும் சார்ந்து இருக்காமல், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதார வளர்ச்சியை பெற வேண்டும் என்ற திடமான குறிக்கோளை எனது அரசு கொண்டுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு பயன் தரக்கூடிய மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் பெருமளவில் முதலீடு செய்யும்வகையில், தொழில் முனைவர்களை ஈர்ப்பதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி தமிழகத்தை மீண்டும் வளமான வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்.
21 ஆம் நூற்றாண்டு அறிவுசார் மனிதவளத்தை நம்பியே உள்ளதால், எனது அரசு மனிதவள மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மனிதவள மேம்பாட்டில் முக்கியக் காரணிகளாக விளங்குவது தரமான கல்வி மற்றும் சுகாதாரம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அடிப்படையில், மாநிலத்தில் சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனில், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில்
இல்லை. மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே தான், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும் என்று 2011-12 ஆம் ஆண்டுக்கான மேதகு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத்
திட்டத்தைச் செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். தற்போதைய காப்பீட்டுத் திட்டம் 2011, ஜுலை மாதம் 5 ஆம் நாள் உடன் முடிவடைந்தது. எனது அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமையும் :-
1. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதியத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில 1.50 லட்சம் ரூபாய் ரூபாய் வரை வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகப்பட்சமாக 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ செலவினை பெற இயலும்.
2. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து, இந்த புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும்.
3. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும் அரசு மருத்துவமனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில், ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை.
4. நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த வகையிலான கட்டணங்களை பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.
5. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படாத ஒன்றாகும்.
6. அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது போல் அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
7. இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்திற்கென அனைத்து வசதிகளுடன் கூடிய
தனி / சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும். இதனால் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவதற்குரிய சூழ்நிலை உருவாகும்.
இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக வழங்கும்.
இவ்வாறு, இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை எனது அரசு உறுதி செய்யும்.
ஜெ ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தமிழக அரசு செய்தி துறை |