காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் அண்ணா நகரில் இன்று மதியம் 02.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசையொன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது.
அண்ணா நகரைச் சார்ந்தவர் யாஸீன் (வயது 60). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மைதீன் ஃபாத்திமா (46). பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு 4 பெண் மக்களும், இரண்டு ஆண் மக்களும் உள்ளனர். 3 பெண் மக்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் தம் கணவர்களுடன் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். 22 வயதான கடைசி பெண் மகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க நாடியுள்ளனர். ஆண் மக்கள் இருவரும் பெற்றோருடன் தொடர்பற்றுப் போய் பல ஆண்டுகளாகின்றன.
இன்று மதியம் சுமார் 02.30 மணியளவில் இவர்கள் இருந்த குடிசை திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. யாஸீன் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்று விட்ட நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாயைக் காப்பாற்ற இயலாமல் பதறியபடி கடைசி மகள் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டிருக்கிறார். தீ பற்றி எரிவதைக் கண்ணுற்ற சுற்றுவட்டாரத்திலிருந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்துவிட்டு, விரைந்து வந்து வீட்டினுள் இருந்த மைதீன் ஃபாத்திமாவை வெளியே தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றிவிட்டனர்.
காற்று பலமாக வீசியதால் கொளுந்து விட்டெரிந்த தீயை அணைக்கும் அவர்களின் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், மதியம் 03.00 மணியளவில் தீயணைப்பு நிலைய வாகனம் சம்பவ இடத்தையடைந்தது. வேகமாக செயல்பட்டு அவர்கள் தீயை முற்றிலுமாக அணைத்துச் சென்றனர்.
இவ்விபத்தில் வீட்டினுள் இருந்த யாருக்கும் காயமேற்படவில்லை. ஆனால், தன் இளைய மகளின் திருமண செலவினங்களுக்காக, தூத்துக்குடியிலுள்ள சொத்தை விற்று ரூபாய் மூன்று லட்சம் பணம் சேமித்து வைத்திருந்ததாகவும், அப்பொருட்களும், சில அணிகலன்களும், வீட்டிலிருந்த டிவி, இரண்டு மின் விசிறிகள், மிக்ஸி உள்ளிட்ட இதர அனைத்துப் பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் முகைதீன் ஃபாத்திமா தெரிவித்தார்.
இந்த விபத்து காரணமாக, உணவு, உடை, உறைவிடம் எதுவுமின்றி அக்குடும்பத்தினர் பரிதவிப்பில் உள்ளனர். இவர்களுக்கு உதவ விரும்புவோர், கற்புடையார்பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி பொருளாளர் கோமான் மீரானை அவரது +91 97903 09149 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தமது உதவி குறித்த விபரத்தைத் தெரிவிக்கலாம் என அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |