தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த கப்பலில், இன்னும் 3 மாதங்களில் சரக்கு கொண்டு செல்ல அனுமதி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
தூத்துக்குடியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிறைவேறியுள்ளது.
தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கடந்த மாதம் 13ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார்.
பிளம்மிங்கோ லைனர்ஸ் என்ற நிறுவனம் ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற அதிநவீன சொகுசு கப்பலை தூத்துக்குடி கொழும்பு இடையே இயக்கி வருகின்றது.
இந்த கப்பல் தூத்துக்குடியில் இருந்து வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும், கொழும்பில் இருந்து திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்களும் இயக்கப்படுகிறது.
இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இப்போது சராசரியாக ஒரு பயணத்துக்கு 150 பேர் வரை செல்கின்றனர். அதேபோன்று இலங்கையில் இருந்தும் பயணிகள் வருகின்றனர்.
ஆனால், 1,040 பேர் பயணம் செய்யக்கூடிய கப்பலில் வெறும் 150 பேர் மட்டுமே செல்வதால் கப்பல் நிறுவனத்துக்கு நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை என்கிறார் பிளம்மிங்கோ லைனர்ஸ் நிறுவன மேலாளர் கோபால்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
நாங்கள் எதிர்பார்த்தப்படி பயணிகள் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கப்பலில் உள்ள உணவு விடுதி, பியூட்டி பார்லர் உள்ளிட்ட சில வசதிகள் இன்னும் முழுமையாக செயல்படவில்லை. எனவே, நாங்களே குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் டிக்கெட்டுகளை அனுமதிக்கிறோம். இந்த வசதிகள் அனைத்தும் இன்னும் 15 நாள்களில் முழுமையாக முடிவடைந்துவிடும். அதற்கு பிறகு கப்பலில் பயணம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த கப்பலுக்கு இருநாட்டு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குழுக்களாக கப்பலில் பயணம் செல்ல பலர் முன்வந்துள்ளனர். 800 பேர் கொண்ட ஒரு குழு 3 நாள்களுக்கு கப்பலில் செல்ல எங்களை அணுகியுள்ளனர். இன்னும் 15 நாள்கள் கழித்த பிறகு இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான குழுக்கள் அனுமதிக்கப்படுவர்.
அடுத்த மாதம் மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டும், சபரிமலை சீசனுக்கும் அதிக பயணிகள் கொழும்பில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் கப்பலில் சரக்குகளைக் கொண்டு செல்ல மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளோம். அந்த அனுமதி இன்னும் 3 மாதங்களில் கிடைக்கும். அதற்கு பிறகு சரக்குகளும் இக்கப்பலில் கொண்டு செல்லப்படும். எனவே, இந்த கப்பல் போக்குவரத்து எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக இயங்கும் என்றார் அவர்.
இதே கருத்தை தெரிவித்தார், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி கிளை முன்னாள் தலைவர் ஆர். எட்வின்சாமுவேல். குறைந்த கட்டணம் என்பதாலும், தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், இலங்கையிலும் சுற்றுலாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் இந்த கப்பலில் அதிக பயணிகள் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மாணவர்கள் அதிகளவில் செல்வார்கள் என்றார் அவர்.
இதேவேளையில் பயணிகள் நலன் கருதி கொழும்பு பயணிகள் கப்பலை தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் எட்வின் சாமுவேல். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள பழைய துறைமுகத்தில் இருந்து கப்பலை இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். பழைய துறைமுகத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் ரயில் நிலையம் உள்ளது.
வ.உ.சிதம்பரனார் பழைய துறைமுகத்தில் இருந்து தான் கொழும்புக்கு கப்பல் விட்டார். எனவே, பயணிகள் கப்பலை இங்கிருந்து இயக்குவதுதான் சரியானதாக இருக்கும். மேலும், பயணிகள் கப்பல் புதிய துறைமுகத்தின் ஒரு கப்பல் தளத்தில் நிறுத்தப்படுவதால், அந்த தளத்தில் சரக்குக் கப்பலை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பயணிகள் கப்பலை பழைய துறைமுகத்துக்கு மாற்றுவதுதான் சரியான நடவடிக்கை என்றார்.
பயணிகள் கப்பலை பழைய துறைமுகத்தில் இருந்து இயக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கங்கள், வணிக சங்கங்கள், பயணிகள் நலச்சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதால், இது தொடர்பாக வ.உ. சிதம்பரனார் துறைமுகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
நன்றி:
தினமணி (11.07.2011) |