ஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (கஸ்வா) அமைப்பின் சார்பில் அம்மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக பணப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கும் பணப்பரிசு வழங்கப்படும் என அவ்வமைப்பின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்று காலை 09.15 மணிக்கு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர் ஒன்றுகூடலின்போது அதற்கான நிகழ்ச்சி, ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்க தலைவர் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது.
கஸ்வா அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். கஸ்வா அமைப்பின் அறப்பணிகள் குறித்து அதன் செயற்குழு உறுப்பினர் எம்.செய்யித் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களின் நீண்ட கரவோசை முழக்கத்திற்கிடையில், மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக அவரது தந்தை கே.எச்.செய்யித் அலவீ பாராட்டுக் கேடயத்தை வழங்க, இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடமும், காயல்பட்டினத்தில் வாழ்நாள் சாதனை மதிப்பெண்ணும் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் அதனைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், பணப்பரிசு ரூ.5000 தொகையை ஹாஜி எஸ்.எம்.உஸைர், மாணவர் அமானுல்லாஹ்விடம் வழங்கினார்.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகி முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, கஸ்வா உறுப்பினர் எம்.யு.இம்ரான் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சாதனை மாணவரைப் பாராட்டினர்.
படங்கள்:
S.R.B.ஜஹாங்கீர்,
அல்தாஃப் எண்டர்ப்ரைசஸ்,
தைக்கா பஜார், காயல்பட்டினம். |