காயல்பட்டினம் கடற்கரையின் மணற்பரப்பில் குப்பை கூளங்கள் நாளுக்கு நாள் அதிகளவில் சேர்ந்து வருகிறது.
தினமும் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக கடற்கரைக்கு வருவோர் அங்கு சாப்பிடும் தின்பண்டங்களின் உறைகளையும், தண்ணீர் பாக்கெட்டுகளையும், குப்பைகள் போடவதற்கென தனி வசதிகள் எதுவுமில்லாத காரணத்தால், இருந்த இடத்திலேயே போட்டுவிட்டுச் சென்று விடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, கடற்கரையில் அடுப்பு வைத்து வியாபாரம் செய்வோர், தமது வியாபாரம் முடிந்ததும், அடுப்புக் கரிகள், கழிவு நீர்களை அங்கேயே கொட்டிவிட்டுச் செல்வதால், கடற்கரையின் வெண்மையான மணற்பரப்பும் நாளுக்கு நாள் நிறம் மாறி மாசடைந்து வருகிறது.
பிஞ்சுக் குழந்தைகள் முதல் இளம் மாணவ-மாணவியர் வரை அனைவருக்கும் பள்ளிக்கூடங்களில் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஒருபுறம் ஏற்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால், கற்ற கல்வியும் பயனற்றுப் போகும் நிலைதான் உள்ளது.
அண்மையில், ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் பயிலும், காயல்பட்டணம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த ஆரிஃபா முஹம்மத் செய்யித் ஹஸன் தம்பதியின் மூன்றே வயதான பிஞ்சுக்குழந்தை எம்.எஸ்.ஹெச்.அப்துல்லாஹ் தனது பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்றிருக்கிறான். அங்கு பிஸ்கட் சாப்பி்ட்ட அவன் அதன் உறையைப் போடுவதற்காக குப்பைத் தொட்டியைத் தேடியிருக்கிறான்.
குப்பைத் தொட்டி எங்கும் இல்லாததையறிந்த அவன் தன் பெற்றோரிடம், “எங்க மிஸ் குப்பைகளை குப்பை தொட்டியில்தான் போடனும்னு சொன்னாங்க... இங்க ஒன்னுமே இல்லையே...?” என்று கேட்டிருக்கிறான்.
இதனால் மனம் நெகிழ்ந்த பெற்றோர் அக்குழந்தையிடமிருந்து பிஸ்கட் உறையை வாங்கி ஒதுக்குப் புறத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது! |