இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் நேற்று துவங்கியது. இம்மாநாட்டை முன்னிட்டு காயல்பட்டினம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பேராளர் பதிவு:
துவக்கமாக, காலை 10.00 மணிக்கு பேராளர் பதிவும், வரவேற்பும் காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலுள்ள வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
துவக்க விழா:
மாநாட்டு துவக்க விழா ஜூலை 08ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று (நேற்று) மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில், வரகவி காசிம் புலவர் பந்தலில், வள்ளல் சீதக்காதி நுழைவாயிலில், சதக்கத்துல்லாஹ் அப்பா அரங்கத்தில் நடைபெற்றது.
மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ் துவக்க விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எஸ்.ஏ,ஷேக் மதார், ஹாஜி எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நிகழச்சிகளை நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிப் கிராஅத் ஓதினார்.
அதனைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்கள், மஜ்லிஸில் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் துவங்கி, மாநாட்டுத் திடல் வரை நகர்வலமாக கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி, நகர மக்களுக்கு மாநாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர், ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபீ கீதம் இசைக்க, அதற்கேற்ப அந்த மத்ரஸாவின் தஃப்ஸ் பிரிவு மாணவர்கள் தஃப்ஸ் முழங்கினர்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்புரையாற்றினார்.
மஸ்னவீ ஷரீஃப் தமிழாக்க நூல் வெளியீடு:
அதனைத் தொடர்ந்து, மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் “மஸ்னவீ ஷரீஃப்” தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் நூலை வெளியிட, இலங்கை அரசின் நீதித்துறை அமைச்சர் ரஊஃப் ஹகீம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக பொதுச் செயலாளர் மு.சாயபு மரைக்காயர் ஆகியோர் அதனைப் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் நூல் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், குமரி அபூபக்கர் வழங்கும் இஸ்லாமிய பாடல் நிகழ்ச்சி அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து, இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் மாநாட்டைத் துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து வேலூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி வாழ்த்துரை வழங்கினார். அவ்விருவருக்கும் மாநாட்டுக் குழு சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.
கவியரங்கம்:
அன்றிரவு 09.00 மணிக்கு பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் “ஊடகம்”” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. துவக்கமாக, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது வரவேற்புக் கவிதை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற கவியரங்கத்தில் தமிழகம் மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற கவிஞர்கள் கவிதை வழங்கினர். கவியரங்கத் தலைவர் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் நிறைவுரையுடன் அவ்வரங்கம் நிறைவுற்றது.
நிறைவாக, மாநாட்டு விருந்தோம்பல் குழு தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் நன்றி கூற, தூத்துக்குடி மாவட்ட காஜி மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீயின் பிரார்த்தனையுடன் துவக்கவிழா நிறைவுற்றது.
இஸ்லாமிய பாடல் அரங்கம்:
துவக்க விழா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பாவலர் எஸ்.எஸ்.அப்துல் காதிர் அரங்கத்தில், நேற்றிரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை இஸ்லாமிய பாடல் அரங்கம் கவிஞர் ஹாஜி எஸ்.செய்யது அஹ்மது தலைமையில் நடைபெற்றது.
ஆழ்வை எம்.ஏ.உஸ்மான் குழுவினரும், நெல்லை அபூபக்கர் குழுவினரும் இவ்வரங்கில் இஸ்லாமிய பாடல்களை இசைத்தனர். அவர்களுக்கு அரங்கத் தலைவர் சால்வை அணிவித்தார்.
இவ்வரங்கை, ஜே.ஏ.முஹம்மத் லரீஃப், எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, என்.எல்.கலீலுர்ரஹ்மான், எம்.எம்.அக்பர் பாதுஷா, எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஏ.ஜே.சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஏ.எல்.நூருல் அமீன், ஏ.ஏ.கே.நெய்னா முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
துவக்க விழா நிகழ்ச்சிகளில் வெளியூர்களைச் சார்ந்த மாநாட்டு பேராளர்கள், உள்ளூர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் அனைத்து களப்பணிகளையும், மாநாட்டு தன்னார்வப் பணிக்குழு தலைவர் ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் தலைமையில், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |