சென்னை எக்மோரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்கும் முறையை மாற்றினால் போராட்டங்கள் நடத்தப்படுமென கோவில்பட்டியில் நடந்த ரயில் பயணிகள் விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு தற்போது சென்னை எக்மோரிலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் நெருக்கடியை குறைக்க தென் மாவட்ட ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும், சென்ட்ரல் ஸ்டேசன் ரயில்களை எக்மோருக்கு மாற்றவும், ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
இதையடுத்து தமிழக ரயில் பயணிகள் உரிமை முனையம் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இதனடிப்படையில் நேற்று முன்தினம் காலை திருநெல்வேலியிலும், மதியம் கோவில்பட்டியிலும் பிரசாரக் கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் வன்னியன், பொருளாளர் நெல்லையப்பன், மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சேதுரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சென்னை தமிழ்நாடு ரயில் பயணிகள் உரிமை முனைய செயலாளர் ஜெயப்பிரகாசம், கன்வீனர் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் போஸ், மாரிமுத்து, எர்னெஸ்ட் பால் ஆகியோர் கலந்து கொண்டு ரயில்வே ஸ்டேசன் மாற்றம் குறித்து பேசினர்.
அப்போது தென்மாவட்ட ரயில்களை எக்மோரில் இருந்தே இயக்கவும், 150 ஆண்டுகள் பழமையான சென்னை ராயபுரம் ரயில்வே ஸ்டேசனை புதுப்பித்து, அங்கிருக்கும் சுமார் 72 ஏக்கரையும் பயன்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திட, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் நெருக்கடியை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்தினர்.
மேலும் இத்திட்டத்தை அரசு நிறைவேற்றாத நிலையில் குறிப்பிட்ட நாளில் அனைத்து ரயில் நிலையங்கள் முன்பும் உண்ணாவிரதம், ஆர்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கான தேதி ஆய்வு செய்து பின்னர் அறிவிக்கப்படுமென முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தொழில் வர்த்தக சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் திருப்பதிராஜா, இணை செயலாளர் பாபு, தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சின்னத்துரை, பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜகோபால், கடலையூர் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், ஜவுளிக்கடைகள் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி, தொழிலதிபர்கள் செல்வமோகன், ரத்தினவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 6) மாலை தூத்துக்குடியிலும், நேற்று (ஜூலை 7 ) காலை விருதுநகர், மதியம் சாத்தூர், மாலையில் சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டையிலும் விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது.
நன்றி:
தினமலர் (09.07.2011) |