உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பணிப்பளுவைக் குறைத்திடும் பொருட்டு மன்றத்தின் சார்பில் பணித்திறன் வாய்ந்த ஒருவர் உள்ளூர் பிரதிநிதியாக துரிதமாக நியமிக்கப்பட வேண்டுமென சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம 08.07.2011 வெள்ளிக்கிழமையன்று 19.45 மணிக்கு, எஸ்.எச்.அன்ஸாரீ தலைமையில், மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் ரஷீத் ஜமான், கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஹாங்காங் முஹம்மத் அலீ உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கடந்த செயற்குழுக் கூட்ட நிரல் குறித்த விளக்கம்:
தொடர்ந்து, கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் அனைவருக்கும் விளக்கினார்.
பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட (கல்வி உதவி கோரும் விண்ணப்பங்கள் தவிர) அனைத்து விண்ணப்பங்களையும் வரும் ஆகஸ்ட் 2011இல் பரிசீலிக்கவுள்ளதாக அவர் அப்போது மேலும் தெரிவித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, இக்கூட்டம் நடைபெறும் தேதி வரையுள்ள மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை தாக்கல் செய்ய, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
2011 ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையுள்ள காலாண்டு பருவத்திற்கான சந்தா தொகைகளை உறுப்பினர்கள் விரைவாக அதன் பொறுப்பாளர்களிடம் சிரமம் பாராமல் செலுத்தி ஒத்துழைக்குமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவ தேவைக்காக அவசர உதவி:
அவசர மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பம் குறித்து இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, அவ்வகைக்காக ரூ.45,000 வரை உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலதிக விண்ணப்பங்கள் குறித்தும் துரிதமாக ஆய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மதை கூட்டம் கேட்டுக்கொண்டது.
இக்ராஃவின் பணிப்பளுவைக் குறைக்க உள்ளூர் பிரதிநிதி துரித நியமனம்:
அடுத்து, அண்மையில் தான் தாயகம் சென்று வந்தபோது பெற்ற பொதுப்பணியனுபவங்ளை மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, தான் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சென்று வந்ததையும், அதன் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் விவரித்த அவர், இக்ராஃவின் நிர்வாகப் பணிகள், அங்கிருக்கும் பொறுப்பாளர்களுக்கு மிகுந்த சிரமங்களை தொடர்ச்சியாக அளித்து வருவதை தாம் நேரடியாகக் கண்ணுற்றதாகவும், காயல் நல மன்றங்களாகிய நாம்தான் தகுந்த செயல்திட்டங்கள் வகுத்து அவர்களது பணிச்சுமைகளைக் குறைக்க வேண்டும் என்றார்.
காயல்பட்டினத்தில் காயல் நல மன்றங்கள் சார்பில் இக்ராஃவுடன் தொடர்புடைய நகர்நலப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடும்போது, அதன் துவக்கமாக இக்ராஃ அங்கத்தினருடன் கலந்தாலோசனை செய்த பின்பு தேதி, நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட செயல்திட்டங்களை இறுதி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்றும், நகர சூழல்கள் நிறைவாகத் தெரியாத நிலையில் இங்கிருந்தவாறே நாம் முடிவெடுத்து அங்கு செயல்படுத்தச் சொல்வதால் இக்ராஃ நிர்வாகத்திற்கு அதிக பணிப்பளு ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதைத் தவிர்த்திடும் வகையில், நமது சிங்கப்பூர் காயல் நல மன்றம் துவக்கமாக, பணித்திறன் வாய்ந்த உள்ளூர் பிரதிநிதி ஒருவரை துரிதமாக நியமனம் செய்து, அவர் மூலம், நம் மன்றம் சார்ந்த பணிகளையேனும் குறைத்துக்கொடுத்து உதவலாம் எனவும் அவர் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
அவரது கருத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்ட கூட்டம், வெகுவிரைவில் பணித்திறன் வாய்ந்த ஒருவரை ஊதிய அடிப்படையில் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியாக நியமிப்பதென தீர்மானித்தது.
வீடு பழுதுபார்க்கும் பணிக்கு உதவி:
மிகவும் அத்தியாவசியமாக பழுது நீக்கப்பட வேண்டிய வீட்டிற்காக உதவி கோரி பெறப்பட்ட ஒரு விண்ணப்பம் குறித்த ஆய்வறிக்கையை மன்றச் செயலர் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அதுகுறித்து செயற்குழு கலந்தாலோசித்து இறுதி முடிவு செய்யுமென முடிவு செய்யப்பட்டது.
இதர ஊடகங்களுக்கும் செய்தியளித்தல்:
மன்றத்தின் செய்திகள் நகரின் அனைத்து ஊடகங்களிலும் வெளிவரும் வகையில், வழமையாக அனுப்பப்படும் ஊடகத்துடன், இதர ஊடகங்களுக்கும் செய்திகளை அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.
இஸ்லாமிய இலக்கிய மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி:
நேற்று (08.07.2011) காயல்பட்டினத்தில் துவங்கிய இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக மாநாடு சிறப்புற நடந்தேறுவதற்காக, மன்றத்தின் சார்பில் அதன் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தலைவர் ரஷீத் ஜமான், செயலாளர் மொகுதூம் முஹம்மத், பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னாலெப்பை ஆகியோரிணைந்து, இச்செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
வரும் ரமழான் மாத துவக்கத்தை முன்னிட்டு, பொருளாதாரத்தில் நலிவுற்ற - உழைக்க சக்தியற்ற - நிராதரவான நகரின் ஏழைக்குடும்பங்களுக்கு இம்மாத இறுதி வாரத்திற்குள் அத்தியாவசிய சமையல் பொருளுதவியை வழங்கி முடிப்பதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வகைக்காக, வழமைபோல அனுசரணையளிக்குமாறும், பயனாளிகள் பெயரை முன்மொழியுமாறும் மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
ஜகாத் நிதி:
காயல்பட்டினத்தில் ஜகாத் பெற தகுதியான ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில், மன்ற உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியை வழமைபோல மன்றத்திற்குத் தந்து ஒத்துழைக்குமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
இஃப்தார் நிகழ்ச்சி:
வரும் ரமழான் மாதத்தின் ஒரு நாளில் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியை நட்த்துவதென தீர்மானிக்கப்பட்டதோடு, அதற்கான இடம், காலம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உடுத்திய நல்லாடைகள் உதவி:
காயல்பட்டினத்திலுள்ள வறியவர்களுக்கு, வரும் ரமழானில் கொடுத்துதவுவதற்காக, மன்ற உறுப்பினர்கள் தாம் பயன்படுத்திய நல்ல நிலையிலுள்ள் ஆடைகளை, வரும் 14.07.2011 தேதிக்குள் மன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியிலோ அல்லது மறுநாள் அக்டோபர் மாதம் 01ஆம் தேதியிலோ, சிங்கப்பூர் Changiயிலுள்ள Chalets (Bungalow)வில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மன்ற உறுப்பினர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் நன்றி தெரிவிக்க, ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கூட்ட நிறைவுக்குப் பின், அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |