தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. வார்டு வாரியாக தனி வரிசை எண் கொடுக்கப்பட்டு வருகிறது. இ ந்த பணியினை விரைவாக முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் மூலம் அனைத்து மாவட்டத்திற்கும் நினைவூட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 1996ஆம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி மன்றங்களின் தேர்தலை நடத்தி வருகிறது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என மூன்று வகையாக செயல்படுகிறது. தற்போது தமிழகத்தில் 563 பேரூராட்சிகள், 148 நகராட்சிகள், 10 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றின் பதவிகாலம் 24.10.2011 உடன் நிறைவு பெற உள்ளதால் அதற்கான தேர்தல்கள் நடக்க உள்ளது.
1986ஆம் ஆண்டு தேர்தலில் நகர்மன்ற தலைவரை நேரடியாக தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு தொடர்ந்து வந்தது. பின்னர் 2006ஆம் ஆண்டில் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் நகர்மன்ற உறுப்பினர்கள் தமக்குள் ஒருவரை நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யும் முறை அமலுக்கு வந்தது. 1992ஆம் ஆண்டு 74ஆவது அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் பல சீர்த்திருத்தங்களை புகுத்தியது. முக்கிய சீர்திருத்தமாக உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் மாற்றப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு அவர்களது மக்கள் தொகை சதவீதத்திற்கு தக்க உறுப்பினர் பதவிகளும், தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் பதவிகளிலும், தலைவர் பதவிகளிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. பேரூராட்சிகளும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளாக கருதப்பட்டு நகராட்சி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
தற்போதைய நகர்மன்றத்தின் பணிக்காலம் அக்டோபர் மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 25ஆம் தேதி புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும், தலைவர்களும் பொறுப்பேற்கும் விதமாக நடவடிக்கை எடுத்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதற்காக முதல் கட்டமாக தற்போது நடந்து வரும் 2011ஆம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து, உள்ளாட்சி தேர்தலுக்கும் பயன்படுத்தலாம் என்று அரசு முடிவு செய்து உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டு அதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சம்பந்தப்பட்ட சட்டசபை வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து வாக்காளர் பட்டியல்கள் மற்றும் குறுந்தகடுகள் (சி.டி) பெறப்பட்டு அதனை வார்டு வாரியாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இது முக்கிய பணியாகும்.
சட்டசபை வாக்காளர் பட்டியலில் பாகம் வாரியாக உள்ளதை பிரிவு செய்து வார்டு, தெரு, கதவிலக்கம் குறித்து வரிசைக்கிரமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கு வார்டு வாரியாக படிக்க, மற்றவர் புதிய பட்டியலில் சரிபார்த்து டிக் செய்யப்பட வேண்டும். ஏதேனும் விடுதல் இருந்தால் அதனை கண்டறிந்து உரிய இடத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
தற்போது அரசினால் ஏற்கனவே உள்ள உள்ளாட்சி அமைப்புகள், வார்டுகளுக்கு மட்டுமே வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ஏதுவாக தயார் நிலையில் இருப்பது, தேர்தலை எவ்விதமான பிரச்னைகளுக்கு இடமின்றி நடத்துவது போன்றவைதான் இன்றியமையாதது. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டத்திலும் மிக வேகமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை மாநில தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பொறுத்தமட்டில் தமிழகத்தில் மிக வேகமாக நடந்து வருவதாக தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:
தினமலர் (07.07.2011) |