பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதியில் இனி ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளலாம். 2 கோடியாக இருந்த தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை இன்று மத்திய அமைச்சரவை வழங்கியது. இது நடப்பாண்டிலிருந்தே அமலுக்கு வரும்.
இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க மாவட்ட மற்றும் மாநில நிர்வாகங்கள் இத்தொகையில் இருந்து இரண்டு சதவீதம் வரை பயன்படுத்தலாம்.
மத்திய அரசு 1993 ஆம் ஆண்டு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தினை (Member of Parliament Local Area Development Scheme - MPLADS) அறிமுகம் செய்தது. அதன்படி ஒவ்வொரு லோக் சபா உறுப்பினரும், ராஜ்ய சபா உறுப்பினரும் வருடத்திற்கு அவர் தொகுதியில் 1 கோடி ரூபாய் வரை குறிப்பிட்ட சில திட்டங்களை அமல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்திய பாராளுமன்றத்தில் 545 லோக் சபா உறுப்பினர்களும், 250 ராஜ்ய சபா உறுப்பினர்களும் உள்ளனர். 1998 - 1999 ஆண்டுகளில் நிதி 2 கோடி என உயர்த்தப்பட்டது.
இத்திட்டப்படி தேர்வுசெயப்படும் திட்டங்கள், மாவட்ட ஆட்சியர் மூலம் செயல்படுத்தப்படும். எவ்வகையான திட்டங்களுக்கு இந்நிதியை பயன்படுத்தலாம் என விதிமுறைகள் உள்ளது. உதாரணமாக பள்ளிக்கூடங்களுக்கு கட்டிடம் கட்டி கொடுக்க பயன்படுத்தலாம், நூலகங்கள் கட்டி கொடுக்க பயன்படுத்தலாம், அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ், எக்ஸ்ரே கருவிகள் வாங்கிக்கொடுக்க பயன்படுத்தலாம். முழுமையான உதாரண திட்டங்களை காண இங்கு அழுத்தவும்.
சில திட்டங்களுக்கு இந்நிதியை பயன்படுத்தக்கூடாது என விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக வழிப்பாட்டு தளங்கள், நினைவுச்சின்னங்கள் எழுப்ப, தனி நபர் உதவிகள் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை மத்திய அரசின் Ministry of Statistics & Programme Implementation அமைச்சரகம் கண்காணிக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள திட்டம் போல் சட்டசபை உறுப்பினர்களுக்கும், பல மாநிலங்களில் இதுபோன்ற திட்டம் உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் - அவர் தொகுதியில் செலவு செய்ய - ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. |