தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) கூடுதலாகப் பெற்ற மாணவ-மாணவியருக்கும் அடுத்த “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியில் பரிசு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என இக்ராஃ செயற்குழு தெரிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ செயலர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமர்று:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 02.07.2011 சனிக்கிழமை இரவு 07.00 மணிக்கு இக்ராஃ அலுவலகத்தில், அதன் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் தலைமையிலும், மூத்த செயற்குழு உறுப்பினர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
துவக்கமாக, கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றதோடு, கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 24 அன்று மாலையில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில், இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” பரிசளிப்பு விழா, மறுநாள் 25.06.2011 அன்று காலையில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட “மாநிலத்தின் முதன்மாணவியுடனான அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியரின் கலந்துரையாடல்” நிகழ்ச்சி, அன்று மாலையில் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து கத்தர் காயல் நல மன்றம் இரண்டாமாண்டாக நடத்திய “நகர பள்ளிகளுக்கிடையிலான மாபெரும் வினாடி-வினா போட்டி” ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்ட விபரங்களை, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கினார்.
பின்னர், மேற்படி நிகழ்ச்சிகள் தொடர்பான வரவு-செலவு கணக்கறிக்கையை இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட இதர அம்சங்கள்:
கல்வி உதவித்தொகை விண்ணப்பதாரர்களை விசாரிக்க தனிக்குழு:
நடப்பு கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளுக்காக கல்வி உதவித்தொகை கோரி இக்ராஃவிற்கு விண்ணப்பித்தவர்களை விசாரிப்பதற்காக, இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களான
(1) கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா,
(2) ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப்,
(3) கே.எம்.டி.சுலைமான் (பொருளாளர்),
(4) ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் (நிர்வாகி)
ஆகியோரடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டது.
இக்குழுவினர் விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் பொருளாதாரச் சூழல் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கல்வி உதவித்தொகை விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்ய தனிக்குழு:
விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை இக்ராஃ அலுவலகத்தில் நேர்காணல் செய்வதற்காக, இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான
(1) ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
(2) லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்,
(3) பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி
(4) ஆசிரியர் எம்.ஏ.புகாரீ
ஆகியோரடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டது.
இக்குழுவினர், நிர்ணயிக்கப்பட்ட நேர்காணல் தேதியன்று, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை இக்ராஃ அலுவலகத்தில் நேர்காணல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இக்ராஃ அடிப்படைத் தேவைகளுக்கு உதவியோருக்கு நன்றி:
மின்தடை காலங்களில் ஏற்படும் நிர்வாகச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அண்மையில் இக்ராஃ அலுவலகத்திற்கு ரூபாய் இருபதாயிரம் மதிப்பிலான இன்வெர்ட்டர் கருவியை இணைந்து அன்பளிப்புச் செய்த இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்ற ஆலோசனைக் கூழு உறுப்பினர் ஹாஜி கூஸ் அபூபக்கர், அதன் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் ஆகியோருக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதுபோல, இக்ராஃவின் அலுவலகப் பணிகளுக்காக தேவைப்படும் லேசர் ப்ரிண்ட்ர் வகைக்காக கூட்டத்திலேயே நிதியுதவி செய்த தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம், அதன் செயலாளர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் ஆகியோருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பரிசுத்திட்டத்திற்கு முழு செயல்வடிவம்:
ஆண்டுதோறும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின்போது நகர சாதனை மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் பரிசுத் திட்டங்கள், அதற்காக தேவைப்படும் நிதியளவு குறித்து இறுதி வடிவம் செய்து, முற்கூட்டியே உலகின் அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் அவற்றை முறைப்படி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்து, அவர்களின் நிரந்தர நிதியொத்துழைப்பைக் கேட்டுப் பெறுவதென தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், ரியாத் காஹிர் பைத்துல் மால் சார்பில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட திட்டமான “கூடுதல் தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப் மார்க்) பெற்ற மாணவ-மாணவியருக்கு ஊக்கப் பரிசுகள் வழங்குவது” குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, கூடுதல் விளக்கங்களை அத்துறை சார்ந்த வல்லுனர்கள் மூலம் கேட்டறிந்து, அதனடிப்படையில் அடுத்தடுத்த செயற்குழுக் கூட்டத்தில், அதையும் பரிசுத் திட்டத்தில் சேர்ப்பது குறித்து இறுதி முடிவு செய்வதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பரிசளித்தோருக்கு நன்றி:
நடைபெற்று முடிந்துள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சியின்போது சாதனை மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்ட பரிசுகளுக்கு அனுசரணையளித்த உலக காயல் நல மன்றங்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தனி நபர்களுக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பேசப்பட்ட இதர அம்சங்கள்...
காயல்பட்டினம் நகர மாணவ-மாணவியருக்காக நிரந்தரமாக கல்வி வழிகாட்டு நடுவம் (Career Guidance Centre) அமைப்பது குறித்து, தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் ஆகியோர் முன்வைத்த யோசனைகள் குறித்தும்,
இக்ராஃவிற்கென சொந்தமாக இடம் வாங்கி அலுவலகம் அமைப்பது குறித்து, அமீரக காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வழங்கிய நினைவூட்டல் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த எண்ணத்தைக் கைவிடப் போவதில்லை என்றும், தகுந்த சமயம் வரும்போது இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நன்றி கூற, அதன் துணைச் செயலர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எம்.புகாரீ, அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம், அதன் செயலர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், ஜித்தா காயல் நற்பணி மன்ற இணைச் செயலாளர் ஹாஜி சட்னி செய்யித் மீரான், அதன் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர் ஜெய்ப்பூர் காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, இக்ராஃ பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி A.தர்வேஷ் முஹம்மத்,
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |