இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாடு துவங்குவதற்கிடையில் ஒரேயொரு நாள் மட்டுமே எஞ்சியிருப்பதையடுத்து ஏற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள மாநாட்டு அலுவலகமான செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில் இன்று காலை முதல் அடுத்தடுத்து கலந்தாலோசனைக் கூட்டங்கள் தொடராக நடத்தப்பட்டும், பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
இன்று மாலையில், மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், விருந்தோம்பல் குழு தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், கண்காட்சிக் குழு தலைவர் ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ், ஏற்பாட்டுக்குழு பொருளாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டு விழாக்குழு தலைவர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், தன்னார்வப் பணிக்குழு தலைவர் ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் மற்றும் இதர குழுத் தலைவர்கள், தத்தம் துறை சார்பாக இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், இனி செய்யவிருக்கிற பணிகள் குறித்தும் மாநாட்டு ஏற்பாட்டுக்குழு செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.அபூபக்கரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
கூட்டத்தில், ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஹாஜி வாவு ஷம்சுத்தீன், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
|