காயல்பட்டினத்திலிருந்து திருச்செந்தூருக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது காட்டு மகுதூம் பள்ளி தர்கா. இங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மஹான் ஷஹீத் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெயரைக்கொண்டே இப்பகுதி “காட்டு மகுதூம் பள்ளி” என்றழைக்கப்படுகிறது.
இந்த தர்காவையொட்டி மஸ்ஜிதுன் நூர் என்ற பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசலில் ரமழான் காலங்களில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் எளிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ரமழானில் ஏதேனும் ஒரு நாளில் விமரிசையான இஃப்தார் ஏற்பாடுகள் செய்து, காயல்பட்டினம் நகரின் மார்க்க அறிஞர்கள், நகரப் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்களை அழைத்து உபசரிப்பது காட்டு மகுதூம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக வழமையாக செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாண்டும் அதுபோன்று, கடந்த 22.08.2011 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காட்டு மகுதூம் பள்ளியின் நிர்வாக ஆலோசனைக் குழு உறுப்பினரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலர் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் முன்னிலை வகித்தார்.
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, ஹாஜி கார்ப்பரேஷன் இஸ்மாஈல், ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், ஹாஜி அம்பலம் மஹ்மூத் நெய்னா, ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும்,
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும், பேரீத்தம்பழம், தண்ணீர் ஆகியவற்றை உள்ளடக்கி, கறிகஞ்சி, வடை வகைகள், பழ வகைகள், குளிர்பானம், தேனீர் என பல வகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
பள்ளியின் வரலாறு குறித்த விரிவான தகவலைக் காண இங்கே சொடுக்குக!
களத்தொகுப்பு மற்றும் படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |