சென்னை வண்டலூரில் உள்ள சீதக்காதி அறக்கட்டளையால் நடத்தப்படும் க்ரஸன்ட் பள்ளியில் - ஒவ்வோர் ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சீதக்காதி போட்டிகள் (SEETHAKATHI TOURNAMENT) என்ற பெயரில் நடத்தப்படும் இப்போட்டிகள் இவ்வாண்டு - அக்டோபர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாநிலம் முழுவதிலுமிருந்து பல பள்ளிக்கூடங்கள் பங்கேற்றன.
போட்டிகளின் ஓர் அங்கமாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. துவக்கமாக நாக் அவுட் முறையில் நடைபெற்றது. அதில் நான்கு சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடையே (6) லீக் போட்டிகள் நடைபெற்றன. மூன்று லீக் போட்டிகள் சரிசம நிலையில் (Draw) முடிவுற்றன.
இறுதிப் போட்டியின் நிறைவில், சிதம்பரம் நகரின் ராணி சீதை ஆச்சி பள்ளி முதலிடத்தைப் பெற்றது. காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியின் கால்பந்து அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
கடும் மழையில் விளையாடி வெற்றிபெற்றுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளியின் கால்பந்து அணி, நேற்று காலையில் காயல்பட்டினம் வந்தடைந்தது. அணி மேலாளரும் - எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருமான ஜமால், பயிற்சியாளர் சதக், அணித்தலைவர் மூஸா உள்ளிட்டோரடங்கிய குழுவை, அணியின் தலைமைப் பயிற்சியாளரும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரருமான ஆர்லண்ட் ராயன், எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் ஆகியோர் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்றனர்.
|