தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட படி, DCW நிறுவனத்தின் இல்மனைட் ஆலையை மூடுமாறும், சுந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கை பெறப்படும் வரை அதன் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும், காயல்பட்டினம் வந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் - சென்னை தலைமை அலுவலக அதிகாரிகளிடம், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்து, கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, 10.12.2012 திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகளிடம் சென்னை வாழ் காயலர்கள் ஒன்றாகத் திரண்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை கடிதங்களாக அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கேளரங்கில் சிறப்புக் கூட்டமும், பின்னர் வெளி வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் காயல்பட்டினம் வருகை:
சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முன்வைக்கப்பட்ட முறையீட்டைத் தொடர்ந்து, அதன் தலைமை உதவி பொறியாளர் மோகன் நாயுடு, சுற்றுச்சூழல் தலைமை இணைப் பொறியாளர் சார்லஸ், அதன் ஆய்வக துணை இயக்குநா மாரிமுத்து, சுற்றுச்சூழல் தலைமை இணைப் பொறியாளர் கிருஷ்ணராம், தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோகுல் தாஸ், தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை விஞ்ஞான துணை அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோரடங்கிய குழுவினர், 22.12.2012 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆய்வக பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் காயல்பட்டினம் வருகை தந்தனர்.
KEPA அலுவலகத்தில் வரவேற்பு:
அவர்களுக்கு, காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரிலுள்ள - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) அலுவலகத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிகாரி உரை:
தாம் வந்துள்ள நோக்கம் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை உதவிப் பொறியாளர் மோகன் நாயுடு அறிமுகவுரையாற்றினார்.
தன்னுடன் வந்திருந்த குழுவினரை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் KEPA அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டின் தொடர்ச்சியாக, DCW ஆலையை ஆய்வு செய்ய தாம் யாவரும் வந்திருப்பதாகவும், தேவையான ஒத்துழைப்புகளைத் தருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
KEPA கோரிக்கை:
அவரைத் தொடர்ந்து, KEPA அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் பேசினார். கூட்டத்தில் சங்கமித்திருந்த KEPA நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினரை அறிமுகப்படுத்திப் பேசிய பின்னர், அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
ஊரின் ஒட்டுமொத்த எதிர்ப்பு:
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் DCW தொழிற்சாலையால் நகரில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசடைந்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு இந்த ஆலையின் கழிவுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் நகர பொதுமக்கள் அனைவரிடமும் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், நகரில் நடத்தப்பட்ட அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக் கமிட்டியினர் உள்ளிட்டோர் நடத்திய கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகள் அதற்கு சான்று பகரும் வகையில் உள்ளது.
இல்மனைட் ஆலையை மூடி நம்பிக்கையளிக்க வேண்டுகோள்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு பரிந்துரைத்த படி, DCW ஆலையின் இல்மனைட் பிரிவு மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, துவக்கமாக DCW தொழிற்சாலையின் இல்மனைட் பிரிவை உடனடியாக மூட உத்தரவிடுவதன் மூலம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது நகர பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
KEPAவின் முறையீட்டை மதித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அளித்த உத்தரவின் பேரில் ஆய்வுக்கு வந்திருக்கும் குழுவினரை மனதார வரவேற்கிறோம். எங்களைப் போலவே உங்களுக்கும் குடும்பம் உள்ளது. நீங்கள் செய்யும் ஆய்வு உளத்தூய்மையானதாக இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
சுதந்திரமான வல்லுநர் குழுவினர் ஆய்வுக்கு கோரிக்கை:
நீங்கள் செய்யும் ஆய்வுடன் நிறுத்திக் கொள்ளாமல், ஏற்கனவே எமது KEPA சார்பில் தங்களிடம் முன்வைக்கப்பட்ட படி, DCW தொழிற்சாலையால் இதுவரை நகரில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்தும், பொதுமக்களின் உடல்நலன் குறித்தும் சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
அதுபோல, DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்தால் ஏற்படவிருக்கும் விளைவுகள் குறித்தும் சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட வேண்டும்.
விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது!
இந்த அனைத்து ஆய்வறிக்கைகளும் பெறப்படும் வரை அத்தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கவே கூடாது.
DCW தொழிற்சாலையை மூட நாங்கள் ஒருபோதும் கோரவில்லை. அரசின் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாக மதித்து அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம்.
சுற்றுச்சூழல் மாசுகளால் உடல் நலன் பாதிப்பு:
சுற்றுவட்டாரத்திலுள்ள பலருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து பலரால் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் மக்களோ - புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க்கொல்லி நோயால் பீடிக்கப்பட்டும், எங்கள் குழந்தைகள் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் பாதிப்பிற்குள்ளாகியும் - அனுதினமும் வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.
எனவே, எங்கள் உணர்வுகளை மதித்து - விலைமதிக்க முடியாத எங்கள் உயிர்களை மதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட வேண்டுமே தவிர, அதன் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாக அமைந்து விடக்கூடாது என்பதையும், முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளோம் என்பதையும் எமதூரின் அனைத்து மக்கள் சார்பாக உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, KEPA அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்தார்.
KEPA நிர்வாகிகள் கருத்துரை:
அவரைத் தொடர்ந்து பேசிய KEPA அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், DCW ஆலைக்கு எதிரான எங்கள் ஊரின் போராட்டம் 1986ஆம் ஆண்டிலேயே தம்மால் முன்னெடுத்துச் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய KEPA துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, செயற்குழு உறுப்பினர் எஸ்.அப்துல் வாஹித் ஆகியோர், DCW ஆலையின் கழிவுகளால் நகரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சான்றுகளுடன் விளக்கிப் பேசினர்.
ஐக்கியப் பேரவையினருடன் சந்திப்பு:
அதனைத் தொடர்ந்து KEPA குழுவினர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை அழைத்துச் சென்றனர். அங்கு ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற சொளுக்கு முத்து ஹாஜி உள்ளிட்டோரடங்கிய பேரவை குழுவினர் அதிகாரிகளுக்கு வரவேற்பளித்தனர்.
பின்னர் பேசிய ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், நகரில் புற்றுநோயின் பாதிப்பு மிகவும் கவலைப்படும் அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும், அதன் காரணமாக எண்ணிலடங்காத உயிர்கள் பலியாகி வருவதாகவும், நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது சொத்துக்களையெல்லாம் விற்றுத் தீர்த்து நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்ததோடு, நேர்மையாகவும் - நகர மக்களின் உணர்வுகளை மதித்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
குழந்தைகள் நல மருத்துவருடன் சந்திப்பு:
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அதிகாரிகளுடன், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் இஸ்மாஈல் பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
பச்சிளங்குழந்தை செய்த பாவமென்ன?
சுற்றுச்சூழல் மாசு காரணமாக நகரில் - ஒரு பாவமும் அறியாத பச்சிளங்குழந்தைகள் எல்லாம் படாத பாடுபட்டு வருகின்றனர். பிறந்து 15 நாட்களே ஆன பச்சைக் குழந்தைகளுக்கெல்லாம் இளைப்பும், சுவாசக் கோளாறும் ஏற்படுவதை அனுதினமும் கொதிப்புடன் கவனித்து வருகிறேன்.
காயல்பட்டினத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். நான் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் குழந்தைகளின் நிலையைப் பார்த்துப் பார்த்து தினமும் இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலையுள்ளது.
இந்தக் குழந்தைகள் செய்த பாவமென்ன? காயல்பட்டினத்திலுள்ள பெற்றோருக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக இவர்கள் இப்படிப்பட்ட நோய்களையெல்லாம் அனுபவித்துதான் ஆக வேண்டுமா?
ஊரைக் காலி செய்யுங்கள்!
“டாக்டர் சார்! இதற்கு என்னதான் வழி?” என்று கவலை பொங்க பெற்றோரும் - உறவினர்களும் கேட்கின்றனர். அவர்களிடம் நான் சொல்வதெல்லாம், “தயவுசெய்து இந்த ஊரை விட்டும் எங்காவது சென்று விடுங்கள்!” என்பதுதான்.
மீண்டும் பிறந்தால் இந்த ஊரில் வாழ மாட்டேன்!
ஏதோ இந்த ஊரில் வாழ்ந்து பழகிப் போனதால், இதை விட்டு எங்கும் செல்ல எனக்கும் - யாருக்கும் மனம் வரவில்லை. நானே இன்னொரு முறை பிறந்து வாழ்க்கை நடத்துவதாக இருந்தாலும் நிச்சயமாக இந்த ஊரை நான் தேர்வு செய்யவே மாட்டேன். நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டை போன்ற ஊர்களில் போய் தங்கி விடலாம் என்றே கருதுகிறேன்.
ஏதோ சிறிய விஷயத்தை பூதாகரமாக்கி நான் கூறுவதாக அதிகாரிகளாகிய நீங்கள் தவறாக எண்ணி விட வேண்டாம்! இது பல காலமாக என் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் குமுறல்! இன்று ஓரளவுக்கு சொற்களாக அது வெளிப்பட்டுள்ளது.
புதிய ஊர் அமைய வேண்டும்...
சுற்றுச்சூழல் மாசுகளை உருவாக்கும் காரணிகள் அமைந்துள்ள இடத்தை இயற்கைப் பேரிடர் தாக்கி, அது முற்றிலும் அழிக்கப்பட்டு, புதிய நிலப்பரப்பு அமைந்தால் மட்டுமே இனி வரும் சந்ததியர் நிம்மதியாக வாழ முடியும்.
நான் முழுமையாக எனது உள்ளக்குமுறலைக் கூறத் துவங்கினால், அது உங்களுக்கே தவறாகப் பட்டு விடும். இந்த இடத்திற்கு அது உகந்ததும் அல்ல என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
இவ்வாறு, கே.எம்.டி. மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் இஸ்மாஈல் தெரிவித்தார்.
ஆய்வுக்காக மணல் - நீர் சேகரிப்பு:
பின்னர், காயல்பட்டினம் கடற்கரை கிழக்குப் பகுதி, காயல்பட்டினத்திலுள்ள கடையக்குடி (கொம்புத்துறை) கடற்கரைப் பகுதி, கடையக்குடி பகுதியில் - DCW தொழிற்சாலையின் அமிலக் கழிவு நீர் கடலில் கலக்கும் இடம், காயல்பட்டினம் புறவழிச் சாலையிலுள்ள காட்டு பக்கீர் தர்ஹா வளாகம் வழியாக செல்லும் ஆலையின் அமிலக் கழிவு நீர் ஓடை ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை KEPA குழுவினர் அழைத்துச் சென்றனர். அவ்விடங்களில், ஆய்வுக்காக மண் மற்றும் நீரை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
கடையக்குடி மக்களின் ஒத்துழைப்பு:
காயல்பட்டினம் - கடையக்குடி (கொம்புத்துறை) பங்குத்தந்தை விக்டர் லோபோ அறிவுறுத்தலின் பேரில், அப்பகுதி வட்டார மக்கள் நல கமிட்டி தலைவர் இயேசுதாசனும் KEPA குழுவினருடன் இணைந்து, ஆய்வக சோதனைக்கான பொருட்களை சேகரிப்பதற்கு உதவினார்.
கடையக்குடி மீனவர்களின் முறையீடு:
காயல்பட்டினம் - கடையக்குடி கடற்கரையில் அதிகாரிகளைச் சந்தித்த மீனவர்கள், தொழிற்சாலையின் கழிவு நீர் கடலில் கலப்பதால் தினந்தோறும் இன்னல்களை அனுபவித்து வருவதாகத் தெரிவித்தனர்.
உடலில் தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு ஏற்படுவதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க அரிய வகை மீன்களெல்லாம் - ஆலையின் அமிலக் கழிவுகள் காரணமாக அடிக்கடி கடலில் செத்து மிதப்பதாகவும், சாதாரண நேரங்களில் நன்றாக ஓடும் தமது படகுகளின் இன்ஜின் கருவிகள், ஆலையின் அமிலக் கழிவு நீர் கலக்கப்பட்ட கடற்பரப்பை அடைந்ததும் வித்தியாசமான சப்தத்துடன் இயங்குவதாகவும், அதைக் கொண்டே கழிவு நீரின் பாதிப்பை தங்களால் உணர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
மீன்பிடி தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாத காரணத்தால், வேறு வழியின்றி வெறுப்புடனேயே இத்தொழிலை செய்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பேசப்பட்ட அனைத்து கருத்துக்களையும் குறிப்பெடுத்துக்கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நடுநிலையுடன் தமது ஆய்வை மேற்கொள்ளப் போவதாகவும், தங்களது இந்த வருகையால் நகரில் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என நம்புமாறு கேட்டுக்கொண்டனர்.
பல்வேறு இடங்களில் சோதனைக்காக மணலும், நீரும் எடுக்கப்பட்டதைப் போல, DCW தொழிற்சாலையிலிருந்து அமிலக் கழிவு நீர் துவக்கமாக வெளியாகும் இடத்திற்கருகில் பல்வேறு இடங்களில் மேற்புறமாகவும், உட்புறமாகவும் மணல் - நீரை சோதனைக்கு எடுக்குமாறு KEPA குழுவினர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.
தொழிற்சாலைக்கு உடன் வர KEPA மறுப்பு:
தொழிற்சாலை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுக்கும் உடன் வருமாறு அதிகாரிகள் KEPA குழுவினரைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன், தமது வேண்டுகோளின் படி சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டும் ஆய்வுகளைச் செய்து அறிக்கையைப் பெற்று வெளியிடுமாறும், அதனடிப்படையில் தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
நிறைவில், காயல்பட்டினம் கடற்கரை முகப்பில் KEPA குழுவினருடன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.
படங்களில் உதவி:
A.K.இம்ரான் |