காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (இன்று) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வருந்துகிறோம், பிராத்திக்கிறோம்
நாடறிந்த நாவலர், நல்ல தமிழ் பேச்சாளர் அண்ணல் பெருமானார் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் அமுத மொழிகளை, ஆய்வு செய்து, அதற்குரிய கருத்துக்களை விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லுகின்ற ஆற்றல் பெற்றவர். இவர்தம் பேச்சு நடை நீர் அலையை வருடிச்செல்லும் தென்றலாய் இனிக்கும். கொடுக்கும் தலைப்பு இவரது இதழ் சிந்தும் அழகு தமிழ் சொற்களால் ஜொலிக்கும்.
அரபு நாடுகள், ஹங்காங், பேங்காக், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனை நாடுகளில் இவர்தம் சன்மார்க்கப் பிரச்சாரத்தால் பயன் பெற்றோர் பல்லாயிரம்.
எண்ணற்ற மார்க்க அறிஞர்களை உருவாக்கி சமுதாயத்திற்களித்த சன்மார்க்கப் போதகர். தமிழக ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவரும், காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லுரியின் முதல்வருமான மரியாதைக்குரிய மெளலானா மெளலவி அல்-ஹாஜ் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ஆலிம், ரஹ்மானி, காதிரி அவர்கள் சென்ற 20-12-2012 வியாழக்கிழமை அன்று வஃபாத்தாகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மறு நாள் காலை 09:15 மணியளவில் அன்னாரது ஜனாஸா சொந்த ஊரான கடையநல்லுரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வல்லிறையேகன் ஆலிம் பெருந்தகை அவர்கள், மாண்புயர் மார்க்கத்திற்காக ஆற்றிய பணிகளை ஏற்று பிழைகளைப் பொறுத்து மேலான சுவனத்தைக் கொடுத்தருள்வானக ஆமின்.
தகுதிவாய்ந்த முதல்வரை, குடும்பத்தலைவரை, இழந்து வருந்தும் மஹ்லரா அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை,
கே.டி.எம் தெரு, காயல்பட்டணம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |