காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் பயிலும் கிறிஸ்துவ மாணவர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பள்ளிக்கு வந்து இனிப்பு வழங்கி, சக மாணவர்களை மகிழ்வூட்டினார்.
காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியிலுள்ள பல ஊர்களிலிருந்தும், பல்வேறு ஜாதி - மதங்களைச் சேர்ந்த அறிவுத்திறன் குறைவுடைய குழந்தைகளும், இயலாநிலை குழந்தைகளும், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் பயின்று - பயிற்சி பெற்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் - வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த விமல்டா - ரெக்ஸன் தம்பதியின் மகன் மேசியோ மிராண்டா என்ற மாணவரும் இப்பள்ளியில் பயின்று வருகிறார்.
டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 24.12.2012 அன்று மதிய வேளையில் இம்மாணவர் யாரும் எதிர்பார்த்திராத நிலையில் திடீரென கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பள்ளிக்குள் நுழைந்தார். அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பும் - பரிசுப் பொருட்களும் வழங்கி மகிழ்வூட்டிய அவர், மாணவர்களுடன் ஆடிப்பாடி உற்சாகமூட்டினார்.
பின்னர், அனைத்து மாணவர்களும் - ‘கிறிஸ்துமஸ் தாத்தா’வாக வந்த மாணவர் மேசியோவுடன் கைகுலுக்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவருடன் படம் எடுத்துக்கொண்டனர்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த மாணவர் மேசியோவைப் பாராட்டி, பள்ளி செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை பரிசு வழங்கினார்.
பின்னர், பள்ளியின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து, மாணவர் மேசியோ, அவரது பெற்றோர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தகவல் & படங்கள்:
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி சார்பாக
சித்தி ரம்ஸான் |