காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைவர்கள் சிறப்புரையாற்றினர். DCW ஆலைக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்பிற்கு ஆதரவளித்தும், நகர்நலன் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விபரம் வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் 25.12.2012 செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் - மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ நினைவு மேடையில் நடைபெற்றது.
கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவுற்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், கத்தர் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் பேசினர்.
கட்சியின் மாநில செயலாளர்களான ஆடுதுறை எம்.ஷாஜஹான், காயல் மகபூப், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில தலைவரும் - தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, செயற்குழு உறுப்பினர் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ மறைவுக்கு இரங்கல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தூத்துக்குடி மாவட்ட முதல் தலைவராகவும், மாநில துணைத்தலைவராகவும் திகழ்ந்து, மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வராக, தலைசிறந்த உலமாக்கள் பலரை உருவாக்கிய, கண்ணியத்திற்குரிய மார்க்க மாமேதை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்களின் மறைவுக்காக இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்கிறது.
தீர்மானம் 2 - சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான KEPAவுக்கு முழு ஆதரவு:
காயல்பட்டினத்திலுள்ள தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW) தொழிற்சாலையால், நகரின் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களால் பல்லாண்டு காலமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுத்திட, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டுவதோடு, அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஊரின் வாழ்வாதார பிரச்சினையாக இருக்கும் இவ்விஷயத்தில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அனைத்து ஜமாஅத்தினர், பொதுநல அமைப்பினர், காயல்பட்டினம் நகராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கைக்கு வலிமை சேர்க்க வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
இக்கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி வரும் தாய்ச்சபையின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிப்பதுடன், இக்கோரிக்கை நிறைவு பெற தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் அவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - தொடர்வண்டி நிலைய மேம்பாடு:
இரயில்வே துறை மத்திய அமைச்சராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் இருந்தபோது, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை மேம்படுத்த - கட்சியின் நகர கிளை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்சியின் மாநிலத் தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை நேரில் பார்வையிட்டு, மேல் நடவடிக்கைக்காக தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் மூலம் தூண்டுதல் செய்ததன் பலனாக, சுமார் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டு, பணிகளும் ஓரளவுக்கு நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒப்பந்தக்காரர்கள் பின்வாங்கிய காரணத்தால், நிறைவேற்றப்பட வேண்டிய பல பணிகள் நிலுவையில் உள்ளன.
குறுகிய - உயரம் குறைவான நடைமேடை காரணமாகவும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் இரயிலில் பயணிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முதியோர் - பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்வண்டி நிலையத்தில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, இடைநின்று போன நிலுவைப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி முடிக்கப்பட, துறைசார் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்களை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தென்னக ரெயில்வே பொது மேலாளரைத் தொடர்புகொண்டு வலியுறுத்தி, வாராந்திர ஜும்ஆ தொழுகைக்கு இடைஞ்சலாக இருந்த செந்தூர் எக்ஸ்ப்ரஸ் ரெயிலின் புறப்பாடு நேரத்தை - பாதிப்பில்லாத வகையில் மாற்றியமைக்கப்பட வழிகோலிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன், வாவு சித்தீக், மொகுதூம் கண் ஸாஹிப், வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எஸ்.டி.கமால், தூத்துக்குடி உவைஸ், பி.எஸ்.என்.அஹ்மத் ஜரூக், என்.டி.இஸ்மாஈல் உள்ளிட்ட - கட்சியின் மாவட்ட - நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான் தலைமையில், பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், எம்.கே.முஹம்மத் அலீ, அரபி எம்.எம்.ஷாஹுல் ஹமீத், மு.அப்துல் ரசாக், பெத்தப்பா சுல்தான், கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், ஜெ.உமர், எம்.டி.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், கே.அப்துல் ரஹ்மான், எம்.எம்.காஜா நவாஸ், நேஷனல் காஜா, கே.எம்.டி.சுலைமான், எம்.எல்.ஷேக்னா லெப்பை, எச்.எல்.அப்துல் பாஸித் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட - நகர நிர்வாகிகள் செய்திருந்தனர். |