காயல்பட்டினம் கே.வி.ஏ.டி. அறக்கட்டளை - ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ இலவச முகாமில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மருத்துவ ஆலோசனை பெற்றனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து, இம்மாதம் 18ஆம் தேதியன்று பொது மருத்துவ இலவச முகாமை நடத்தின.
முகாம் துவக்க நிகழ்ச்சியை, ஹாஃபிழ் எச்.பி.என்.ஷாஹ்ஸாத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ,ஆபிதா ஷேக் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.
கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் வரவேற்புரையாற்றினார். கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் சேவைகள் குறித்து மு.அப்துல் ரசாக் பேசினார்.
சென்னை - காயல்பட்டினம் ஐக்கிய சங்க துணைத்தலைவர் ஹாஜி ஆர்.எம்.என்.ஷேக்னா, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத், காயல் அமானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்து, வாழ்த்துரை வழங்கினர். கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் முகாம் அறிமுகவுரையாற்றினார். காயல்பட்டினம் நகர்மன்ற 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கீயஷீலா, கே.ஜமால் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
துவக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர் முகாமைத் துவக்கி வைத்தார்.
கண், பல், தோல், காது - மூக்கு - தொண்டை, மன நலம், பிசியோதெரபி, பொது மருத்துவம் ஆகியவற்றுக்கான மருத்துவ ஆலோசனைகள்
டாக்டர் அபுல்ஹஸன்,
டாக்டர் ஜாஃபர் ஸாதிக்,
டாக்டர் கலையரசி,
டாக்டர் சந்தாண கிருஷ்ணகுமார்,
டாக்டர் ரவிசங்கர்,
டாக்டர் சுலைமான்,
டாக்டர் சிவசைலம்,
டாக்டர் ரெனட் ஜோயல்,
ஆகிய பல்துறை சார்ந்த மருத்துவர்களால் வழங்கப்பட்டது.
வாசன் கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட கண் மருத்துவ பரிசோதனை முகாமில் சுமார் 400 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 15 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை மேலாளர் ஆஷிக் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |