காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கான நிலம் தொடர்பாக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஐக்கியப் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
19/12/2012 அன்று (புதன் கிழ்மை)காலை 10:00 மணிக்கு ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் அல்-ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கல் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தின் பொருள் நகரில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தெரிவு செய்து தரும்படியாக நகர்மன்ற உறுப்பினர்கள் தந்துள்ள மனு சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் 1:
நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், மேற்படி நிலத்தை முஸ்லிம் ஐக்கிய பேரவை தெரிவு செய்து தரும்படியாக, நமது நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட உறுப்பினர்கள் 18 பேர்களும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை நகர்மன்ற உறுப்பினர்கள் 13 பேர்கள் சென்ற 05-12-2012ம் தேதி பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள். மேற்படி மனுவை இக்கூட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, ஐந்து ஏக்கர் நிலத்தை பேரவையின் மூலம் தெரிவு செய்து கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 2:
தேவைப்படுகின்ற நிலத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு இலட்சம் மட்டுமே.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நகராட்சியின் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத்தலைவருமான, பேரவையின் கெளரவ ஆலோசனை குழு உறுப்பினர் மரியாதைக்குரிய அல்-ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள், நமதூர் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பேரவையின் வேண்டுகோளை ஏற்று, தேவைப்படுகின்ற ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசு நிர்ணயித்த விலைக்கே தருவதாக ஒப்புக்கொண்டு அறிவிப்பு செய்ததை இக்கூட்டம் தக்பீர் முழக்கதுடன் வரவேற்று, அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
தீர்மானம் 3:
கொட்டப்படும் குப்பைகளிலிருந்து எந்திரங்கள் மூலம் எரிவாயு தயாரிப்பதற்கு நமது நகராட்சிக்கு தமிழக அரசு ரூபாய் தொன்னூறு இலட்சம் ஒதிக்கீடு செய்துள்ளது, மேற்படி குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எரிவாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுமா? மக்கள் நலம் பாதிக்கப்படுமா? என்பன போன்ற விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி மூலமாகவும், பயோ எரிவாயு தயாரிக்கப்படுகின்ற ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும், பேரவையால் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைப்பதென முடிவ செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |