காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
KEPA போராட்டம்:
இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒருங்கிணைப்புப் பணிகளை செய்து வரும் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) ஒருங்கிணைப்பில் பல்வேறு தொடர் போராட்டங்கள் கடந்த நவம்பர் மாதமத் 30ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
கலந்தாலோசனைக் கூட்டம்:
இது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக்கமிட்டியினர், நகர்மன்ற அங்கத்தினர் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டம், 24.12.2012 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரிலுள்ள KEPA அலுவலக கட்டிடத்தின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள்:
KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
KEPA துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
செயலர் உரை:
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்களுக்கெதிராக KEPA ஒருங்கிணைப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்ட நடவடிக்கைகள் குறித்து KEPA செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா விளக்கிப் பேசினார்.
2012 - நவம்பர் 29ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், செய்தியாளர் சந்திப்பு, விழிப்புணர்வு பொதுக்கூட்டம், அதே நாளிலும், அடுத்தடுத்த நாட்களிலும் இந்திய தலைநகர் டெல்லியில் - சுற்றுச்சூழல் துறை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனை ஜெய்ப்பூர் காயல் நல (ஜக்வா) மன்றத்தினரும், டெல்லிவாழ் காயலர்களும் இணைந்து சந்தித்து, KEPA சார்பில் அதன் கோரிக்கை மனுவை நேரில் அளித்த நிகழ்வுகள், அவற்றைத் தொடர்ந்து - டிசம்பர் 10ஆம் தேதியன்று சென்னை - கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் திரளான சென்னை வாழ் காயலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்களுக்கெதிராக வினாக்கள் எழுப்பிய நிகழ்வு, அதனைத் தொடர்ந்து அங்குள்ள கேளரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளரிடம் இதுகுறித்து அவர்கள் நேரில் முறையிட்டமை, பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு உட்பட அனைத்தையும் அவர் தனதுரையில் தெளிவுற எடுத்துரைத்தார்.
செய்தித் தொடர்பாளர் உரை:
அவரைத் தொடர்ந்து பேசிய KEPA செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், 22.12.2012 அன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக அதிகாரிகளின் தலைமையில் - DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் மாசு குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த குழுவினருடன் KEPA குழுவினர் - ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளுக்கு இணைந்து சென்று வழிகாட்டிய நிகழ்வுகளையும், அப்போது முன்வைத்த கோரிக்கைகளையும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், கே.எம்.டி.மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் இஸ்மாஈல் ஆகியோருடன் அந்த அதிகாரிகளை சந்தித்துக் கருத்துக் கேட்கச் செய்த நிகழ்வுகளை விளக்கி உரையாற்றினார்.
முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் உரை:
அவரைத் தொடர்ந்து பேசிய - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், DCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிராக முஸ்லிம் லீக் துவக்கம் முதல் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட்டதோடு, மக்களின் உயிர் பாதுகாப்பை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு - மனமார்ச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் மனதார ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
KEPAவுக்கு முஸ்லிம் லீக் முழு ஆதரவு:
அத்துடன், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) ஒருங்கிணைப்பில் - DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு தெரிவிக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய KEPA செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஸாலிஹ், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக்கமிட்டியினர் - நகர்மன்ற அங்கத்தினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானங்கள்...
தீர்மானம் 1 - ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி:
KEPA ஒருங்கிணைப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து போராட்டங்களுக்கும் முழு ஒத்துழைப்பளித்த நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக்கமிட்டியினர், நகர்மன்ற அங்கத்தினர், அரசியல் சர்வ கட்சியினர், வணிகர் சங்கத்தினர், அமைப்பு சாரா வணிகர்கள், வாடகை வாகன ஓட்டுநர் சங்கத்தினர், அமைப்பு சாரா வாடகை வாகன ஓட்டுநர்கள், அனைத்துலக காயல் நல மன்றங்கள், சென்னை வாழ் காயலர்கள், சென்னை மஸ்ஜிதே மஃமூர் பள்ளி, மஸ்ஜிதுல் அஷ்ரஃப் பள்ளி ஆகிய பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சென்னை வணிக நிறுவனங்களின் அதிபர்கள், டெல்லி வாழ் காயலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது தொடர்பாக இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொடர் முயற்சிகளுக்கும் எப்போதும் போல் முழு ஒத்துழைப்பளிக்குமாறு அனைவரையும் KEPA உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.
தீர்மானம் 2 - DCW தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேகரித்தல்:
DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக, சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பலரால் பாதுகாக்கப்பட்டு வரும் ஆவணங்களைக் கேட்டுப் பெறுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்பு:
அரசின் மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி - சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் DCW தொழிற்சாலை மீது நடவடிக்கை கோரி, தூத்துக்குடி, ஸ்பிக் நகர், முத்தையாபுரம், பழைய காயல், முக்காணி, புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து, 2013 ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - பெண்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு:
DCW ஆலையால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து, காயல்பட்டினத்திலுள்ள அனைத்து பெண்களையும் பொது இடத்தில் ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
KEPA செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் நன்றி கூற, இறைப்பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், இ.எம்.சாமி ஆகியோரும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக்கமிட்டியினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட நிகழ்வுகளின் வீடியோ பதிவுகளை பின்வரும் இணைப்புகளில் சொடுக்கி காணலாம்:-
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 22:25 / 01.01.2013] |