இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், ஊரிலுள்ள அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும் என காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 25.12.2012 அன்று இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி இப்பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விசாரணையின்றி பல்லாண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தான இத்தீர்மானங்கள் மீது அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள உள்ள விபரம் பற்றி துணை ஜனாதிபதி, பிரதமர், கூட்டணித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கடிதங்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலையாய லட்சியங்களில் ஒன்று சமுதாய ஒற்றுமை. முஹல்லா ஜமாஅத்தை வலிமைப்படுத்துவது. அந்த அடிப்படையில்தான் சமுதாய நலனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை கருதி ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த காயல்பட்டினம் நகரமும் ஒன்றுபட்டு உழைத்தால் மட்டும்தான் நாம் நினைப்பதை சாதிக்க முடியும். ஊரை பாதுகாக்க முடியும்.
இந்த காயல் மாநகரில் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு எம்.கே.டி.முஹம்மது அபூபக்கர், எல்.கே. லெப்பைத் தம்பி ஆதரவாளர்கள் என இரு பிரிவாக இந்த நகர் பிரிந்து பிரச்சினைகளை சந்தித்தது. இப்படி பிளவுபட்டு கிடப்பது சமுதாய நலனுக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல என்பதால் இந்த பிளவை முடிவுக்கு கொண்டு வந்து ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சி மேற்கொண்டது. அன்றைய நகரச் செயலாளர் வாஹித் ரேடியோ, எஸ்.ஐ.எம். ஹனீபா போன்றவர்கள் கடுமையாக மேற்கொண்ட முயற்சியின் விளைவால் ஒற்றுமை ஏற்பட்டது.
இன்றும் அதே உள்ளாட்சித் தேர்தல் காரணத்தால் ஊர் பிரிந்து கிடக்கிறது. தேர்தல் நடைபெற்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் நகராட்சியிலும், ஊரிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தால் பணிகள் தடைபட்டுக் கிடக்கின்றன.
காயல்பட்டினத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்புக்களை பிரதிநிதித்துப்படுத்தும் ஒருங்கிணைந்த ஸ்தாபனம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை. இது ஒரு சக்தி. நகரின் நல்ல பணிகளுக்கு வாரி வழங்கி வருபவர் தனவந்தர் ஹாஜி எல்.கே.எஸ். அக்பர் ஷா அவர்கள். இந்த ஊரில் சுமார் 1500 குடும்பங்கள் அவரால் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் ஒரு சக்தி நகரில் பணிகளை செயல்படுத்த வேண்டியவர்கள் காயல்பட்டினம் நகராட்சியினர். ஆக்கப்பூர்வமான காரியங்களை முன்னின்று உழைக்க வேண்டியவர்கள் இளைஞர்கள். இவர்கள் ஒரு சக்தி. இந்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் நாம் எதையும் சாதிக்க முடியும்.
இந்த நகரில் நலப்பணிகளை ஏராளமாகச் செய்து வரும் உலகளாகவிய காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றியது காயல்பட்டணம்.காம் இணையதளம். அதே நேரத்தில் இணையதளங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு கருத்து எழுதும் பலர் மனம் வேதனைப்படும்படியாக விமர்சிக்கும்போது உள்ளபடியே வருத்தம் ஏற்படுவது உண்மைதான்.
இதோ இந்தக் கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து இணையதளத்தில் செய்தி வெளிவரும்போது, அதைப் பாராட்டி பலரும், விமர்சித்து பலரும் கருத்துக்களை எழுதுகின்றனர். விமர்சித்து எழுதுபவர்களின் கருத்துக்களைப் பார்க்கும்போது, சமுதாய நோக்குடன் இவ்வளவு சிரமப்பட்டு கூட்டத்தை நடத்தும் நமக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
நமதூருக்கு நன்மை செய்வதற்காகவே முஸ்லிம் ஐக்கியப் பேரவை உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றாலும், கழிவுகளை கொட்ட நிலம் வேண்டும் என்றாலும் பெருந்தகைகளை அணுகி நிலமும் பணமும் பெற்றுத் தருகிறது. இவர்களையும், பொதுநலவாதிகளையும் மரியாதை குறைவாக விமர்சிப்பதை எப்படி ஏற்க முடியும்?
ஐக்கியப் பேரவையில் இருப்பவர்களும், நடந்தவற்றையே மனதில் தேக்கி வைத்துக்கொண்டிருக்காமல், இனி நடக்க வேண்டியதைப் பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, கவுரவம் பார்க்காமல் செயலாற்ற முன்வர வேண்டும்.
காயல்பட்டினம் நகராட்சியில் நல்லது நடக்க வேண்டும்; லஞ்சம் அறவே கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார் நகர்மன்றத் தலைவர் அவர்கள். அதேசமயம் உறுப்பினர்களையும் அரவணைத்துச் சென்றால் மட்டுமே பணி செய்ய முடியும். எனவே, தலைவரும், உறுப்பினர்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக நகராட்சி உறுப்பினர்களையும், முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் எம்.எம்.உவைஸ் ஹாஜி அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறோம். இன்னும் பல அமர்வுகள் நடைபெறவுள்ளது.
டி.சி.டபிள்யு. இரசாயன ஆலையால் இந்தப்பகுதியில் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை தடுக்க காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசனை சந்திப்பதற்கும், மேற்கொண்டு முயற்சி மேற்கொள்வதற்கும் நமது நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. சேவையாற்றி வருகிறார். இந்த நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஒத்துழைப்புக்களை அளிக்க வேண்டும்.
மத்ரஸா கல்வி மேம்பாட்டிற்கு அடுத்த ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ. 900 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருந்தும் - கடந்த முறை தமிழ்நாட்டிலிருந்து ஒரு மத்ரஸாவும் ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்பது வேதனைக்குரியது.
இம்முறை எல்லா மத்ரஸாக்களும் இந்நிதியை பெற்று பயணடைய வேண்டும் அதை பெற்றுக் கொடுக்க தாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். |