காயல்பட்டினம் நகரில் நிலவும் உட்பிரச்சினையில் சுமுகத்தை ஏற்படுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சிகளை மேற்கொள்ளும் என அக்கட்சியின் தமிழக தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் காயல்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
நகரத் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மது நாசர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி, சுதந்திர தொழி லாளர் யூனியன் மாநில செயலாளர் கே.எம். நிஜாமுத்தீன், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் பாம்பு கோவில் சந்தை செய்யது பட்டாணி.
தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி. மீராசா மரைக்காயர் மாவட்டச்செயலாளர் எஸ். ஜே. மஹ்மூதல் ஹஸன், கத்தார் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மது பாங்காக் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம். சம்சுத்தீன், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் ஏ.ஆர். அஷ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரைச் சுருக்கம் வருமாறு:-
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அனைவரும் திரும்பத் திரும்ப வலியுறுத்திய ஒரே விஷயம் சமுதாய ஒற்றுமை. சமுதாயத்தை ஒன்றுபடுத்துவது, ஊரை ஒன்றுபடுத்துவது என்பது தலையாய கடமை.
காயல்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைத்து ஓற்றுமையை ஏற்படுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு முயற்சி செய்யும்.
சமுதாயத்தை ஒற்றுமை படுத்தவும், அரசியல் ரீதியாக ஒரு கொடியின் கீழ் கொண்டு வரவும் பாடுபட வேண்டியது நம் கடமை. மதசார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டி பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு முயற்சி மேற்கொள்ளும் என கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுத்து பிரகடனப்படுத்தினோம்.
பாசிச சக்திகளை வீழ்த்த மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டு மென்பது தமிழகத்திற்கோ, கேரளாவிற்கோ மட்டும் உரியது அல்ல அது அகில இந்தியாவிற்கும் உரியது.
அடுத்த பிரதமராக தலித் ஒருவர்தான் வர வேண்டும் என்கிறார் மாயாவதி. ஜெயலலிதா தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பிரதமராக வந்து நாட்டை வழி நடத்த வேண்டுமென்கிறார்கள் அஇஅதிமுகவினர், ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்றால் இந்தியாவையே இருண்ட நாடாக்கவா? தமிழகம் படும் பாடு போதாதா?
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் மடிந்து கொண்டிருக்கிறார்கள் கடுமையான மின்வெட்டால் தொழிலாளர்கள் இம்மாநிலத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்க்கவோ அதைப்பற்றி கவலைப்படவோ செய்யாத ஜெயலலிதா நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குஜராத் செல்கிறார்.
நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என இன்று முழங்குகிறார்கள். இவர்கள் நாட்டைப் பற்றி கவவைப்படாதவர்கள்; நல்லிணக்கத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள். மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றழித்த, 992 கிராமங்களில் இருந்த இஸ்லாமியர்களை இல்லாமல் விரட்டிய, 660 பள்ளிவாசல், தர்கா, கபரஸ்தான்களை தரைமட்டமாக்கி நாசகாரச் செயலுக்கு அங்கீகாரமளிப்பதுதான் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவதென்பது அவரது முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு செல்வது என்பது கூட ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.
சிறுபான்மை முஸ்லிம்களை கொன்று குவித்த அவர்களின் கலாச்சார சின்னங்களை அழித்ததை அங்கீகரிக்கவா அவரது பதவி ஏற்பு விழாவிற்கு செல்கிறீர்கள்.
இடம் பெயர்ந்த முஸ்லிம்களை அவரவர் சொந்த ஊர்களில் குடியமரச் செய்யுங்கள் என்று யாராவது சொல்கிறார்களா? தகர்க்கப்பட்ட பள்ளிவாசல்களை திரும்ப கட்டிக்கொடுங்கள் என யாராவது சொல்கிறார்களா? இவற்றை சொல்லாமல் மோடியை பிரதமராக்குவோம் என சொல்கிறார்கள் என்றால் அது பாசிச வெறியையே காட்டுகிறது.
எனவேதான் சமய சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அழைப்பு விடுத்துள்ளது.
எங்கள் கவலை எல்லாம் சமுதாயத்தின் வருங்காலத்தை பற்றித்தான். வருங்கால தலைமுறை மானத்தோடு வாழ நூறாண்டு பாரம்பரியமிக்க இயக்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். அந்த வழி காட்டுதலை கேரள முஸ்லிம்கள் ஏற்றதால் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டிலும் சில சமயம் ஏற்கிறார்கள். சில நேரம் ஏற்க மறுக்கிறார்கள் என்பதால்தான் சமுதாயம் பின்னடைவை சந்தித்தது.
கோவை முஸ்லிம் சிறைவாசிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. பேசினார். உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடும் அபூதாஹிரை சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இருமுறை உத்தரவிட்டும் தமிழ்நாடு அரசு அதை செயல்படுத்தவில்லை. அபூதாஹிர் விடுதலை ஒரு சிறு விஷயம். சிறு விஷயத்திலேயே இப்படி என்றால் பெரிய விஷயங்களில் இந்த அரசு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
எனவேதான், சமுதாய நலனில் அக்கறை கொண்டு சமுதாய எதிர்காலத்தை மனதில் நிறுத்தி பல்வேறு முடிவுகளை கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் மேற்கொண்டோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் இதுபோன்ற முயற்சிகளுக்கு சமுதாயம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார். |