DCW ஆலை மீது நடவடிக்கை கோரி, காயல்பட்டினம் நகரிலும், சுற்றுப்புற ஊர்களிலும் 1 இலட்சம் கையெழுத்து சேகரிக்க விரிவான செயல்திட்டங்கள், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA செயற்குழுக் கூட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இத்தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்களைக் கண்டித்தும், அதன் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களை வலியுறுத்தியும், காயல்பட்டினம் உள்ளிட்ட - தொழிற்சாலையைச் சுற்றியுள்ள ஊர்களில், 2013 - ஜனவரி 15ஆம் தேதிக்குள் 1 லட்சம் கையெழுத்து சேகரித்தல் உட்பட சில தீர்மானங்கள் - 24.12.2012 அன்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக் கமிட்டியினர் - நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஒரு லட்சம் கையெழுத்து சேகரிப்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக - KEPAவின் செயற்குழுக் கூட்டம் 01.01.2013 செவ்வாய்க்கிழமை இரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரிலுள்ள KEPA அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மற்றொரு துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, நகரப் பிரமுகர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இறைமறை வசனங்களை தமிழாக்கத்துடன் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தலைவர் முன்னுரையைத் தொடர்ந்து, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து, கூட்டத்தின் நோக்கம் குறித்து KEPA துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
பின்னர், ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்பது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டோர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
நிறைவில், நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பொதுமக்கள் கூடுமிடங்களிலும் ஆண்களிடம் கையெழுத்துக்களை சேகரிக்கவும், நகரின் அனைத்து மகளிர் மத்ரஸாக்கள் - கல்லூரிகளில் கையெழுத்து செகரிக்கவும், மகளிர் தன்னார்வலர்கள் மூலம் நகரிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் வீடு வீடாகச் சென்று கையெழுத்துக்களை சேகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
வெளியூர்களைப் பொருத்த வரை, அந்தந்த ஊர்களின் பிரமுகர்களை அணுகி, தேவையான ஒத்துழைப்பைப் பெற்று - அவர்களின் உதவியுடன் அப்பகுதிகளில் கையெழுத்துக்களை சேகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
நிறைவாக, KEPA செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், KEPA செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|